அயோத்தி நிலம் தொடர்பாக தொடரும் விசாரணை

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலத்தைத் தவிர்த்து, இடிக்கப்பட்ட மசூதிக்கு வெளியில் இந்துக்கள் ராமர் கோவில் கட்டுவதில் ஆட்சேபம் இல்லை என்று முஸ்லீம் கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான 2.77 ஏக்கர் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தம் என்பதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.பல்வேறு தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டமாக முஸ்லீம்களின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முஸ்லீம்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே இடத்தில் வழிபாடு செய்வது ஏற்கத்தக்கதுதான் என்றும், ஆனால் அந்த சொத்து முஸ்லீம்களுக்கு உரியது என்று கூறினார்.

1949 க்கு முன்பு ராமர் சிலை மசூதிக்கு வெளியே வணங்கப்பட்டு வந்தததாகவும் அதே ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், மசூதிக்கு வெளியே அர்ச்சகர்களுக்கு இறைவனை சேவை செய்யும் உரிமை இருந்தது என்று கூறினால், அங்கு இந்து வழிபாட்டு முறையும் இருந்தது என்றுதானே அர்த்தம், அந்த முறை 1949க்கும் முன்பும் அங்கு இருந்தது என்றும் சொல்லலாம் என்பதை சுட்டிக் காட்டினர். இந்துக்களின் வழிபாடு அனுமதிக்கப்பட்டது என்றால் அது இஸ்லாமிய நெறிகளின் படி மசூதிதானா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தவான், ராமர் வழிபாடு இருந்தது என்றும், ஆனால் இந்துக்களுக்கு அந்த இடத்தில் உரிமையை முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் மறுத்துள்ளன என்று கூறினார். அப்போது நீதிபதிகளில் ஒருவரான நசீர், இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வழிபாடு செய்ய முடியுமா? என்றும், இந்தியாவில் சூபியிச மரபு தழைத்தோங்கிய போது இஸ்லாமிய முறைப்படி என்ன நடைமுறை இருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராஜீவ் தவான், குரானின் சட்டம்தான் முதன்மையானது என்பது உண்மைதான் என்றும், ஆனால் நவீன வாழ்க்கைமுறைகளில் குரானின் சட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதைத்தான் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று வாதத்தை முடித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே