வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட போது அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், “ஒரு தேசியத் தலைவரின் திருவுருவச் சிலையை பட்டப்பகலில் காவல் நிலையம் அருகிலேயே திரண்டு வந்து மணிக்கணக்கில் அதை தாக்கி தகர்த்துத் தரைமட்டமாக்கும் வரையில் காவல்துறை என்ன செய்தது என்று தெரியவில்லை. அதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அந்த இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவியது ஆறுதல் அளிக்கிறது. இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடக் கூடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.