அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 72 ரூபாயாக உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்தது. வியாழக்கிழமை மாலை 71 ருபாய் 81 காசுகள் முடிவடைந்து இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலையில் வர்த்தகம் நேரம் தொடங்கியதும் 22 காசுகள் குறைந்து கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு 72 ருபாய் 03காசுகள் வர்த்தகமானது. பின்னர் 9.10 மணியளவில் 18 காசுகள் குறைந்து ரூ 71 ரூபாய் 99 காசுகளாக இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.6 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டில் 3.1 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் பங்குச் சந்தைகளில் நிலவிவரும் சரிவுகள் உள்ளிட்டவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகின்றன. அதேபோல் சீன யுவான் மதிப்பின் திடீர் வீழ்ச்சியால் வளர்ந்து வரும் சந்தைகளில் அதிகரித்துள்ள ஏற்று இறக்கங்களும் ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.