அமெரிக்காவின் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டார் முதலமைச்சர் பழனிசாமி

அமெரிக்காவில் டெஸ்லா மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அந்நிறுவனம்  தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா கார் நிறுவனம் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனமாகும். டெஸ்லா கார் மின்சாரக் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்டார். அவருக்கு மின்சாரக் கார் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மக்களின் போக்குவரத்து சேவையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அந்த வகையில் டெஸ்லா கார் நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் தமிழக அரசு சார்பாக முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார்.

டெஸ்லா நிறுவன அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதலமைச்சரும், முதலமைச்சருக்கு டெஸ்லா நிறுவனத்தினரும் நினைவுப் பரிசுகளை வழங்கினர். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரி உடன் சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே