அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 8 அப்பாச்சி ஏ.எச்.64ஈ ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் தளத்தில், விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா முன்னிலையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹெலிகாப்டர் என்ற பெருமையைப் பெற்றது அமெரிக்காவின் அப்பாச்சி ஏ.எச்.64ஈ.
போயிங் நிறுவனத் தயாரிப்பான அப்பாச்சி ஏ.எச்.64 ஈ ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் அமெரிக்கா – இந்தியா இடையே கையெழுத்தானது.
22 ஹெலிகாப்டர்களை வாங்குவதென ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக 8 ஹெலிகாப்டர்கள் கடந்த இரு மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்திற்கு 8 ஹெலிகாப்டர்களும் கொண்டு வரப்பட்டன. அவற்றை இந்திய விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி, பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் இன்று நடைபெற்றது.
விமானப் படையின் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா முன்னிலையில் இணைப்பு விழா நடந்தது. அப்போது ஹெலிகாப்டர் முன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதன்பின்னர், 8 அப்பாசி ஹெலிகாப்டர்களும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமானப் படை செய்தி தொடர்பாளர் அனுபம் பானர்ஜி, துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படும் என்றார். 2020ஆம் ஆண்டுக்குள்ளாக 22 ஹெலிகாப்டர்களும் இந்திய விமானப் படைக்கு கிடைத்து விடும் என்று தெரிவித்தார்.
அப்பாச்சி ஏ.எச்.64ஈ ரக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும் 14ஆவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் மணிக்கு 279 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டக் கூடியது. ஒரு நிமிடத்தில் 256 நகரும் இலக்குகளை கண்டறியும். 128 இலக்குகளை லாக் செய்ய முடியும்.
30 எம்.எம்.எந்திர துப்பாக்கி மூலம் ஆயிரத்து 200 ரவுண்டுகள் வரை சுட்டுத் தாக்குதல் நடத்த வல்லவை. ராணுவ டாங்குகளை தாக்கி அழிக்கும், லேசர் உதவியுடன் கூடிய 16 ஏவுகணைகள்
அந்த ஹெலிகாப்டரில் இருக்கும். தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஹைட்ரா ராக்கெட்டுகளும் உள்ளன.
இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய விமானப் படைத் தலைமை தளபதி பி.எஸ். தனோவா, எம்.ஐ. 35 ரக ஹெலிகாப்டர்கள் பழையதாகி விட்டதால், அவற்றுக்குப் பதில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் என்றார். தாக்குதலுக்கான அப்பாச்சி ஹெலிகாப்டர்களால், இந்திய விமானப் படையின் செயல் திறன் மேம்படும் என்று அவர் கூறினார்.