சென்னையில் போதை மாத்திரைகளை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்து வந்த தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் மொபைல் போனில் அந்த நபரை தொடர்பு கொண்டு தங்களுக்கு போதை மாத்திரைகள் வேண்டுமென கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை எடுத்து வந்தபோது போலீசார் கையும் களவுமாக அந்த இளைஞனைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த முனியசாமி (20) என்பது தெரியவந்தது. இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது Zomato-வில் டெலிவரி பாயாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் போதை மாத்திரைகளை வீட்டுக்குச் சென்று டெலிவரி செய்தால் அதிக அளவில் பணம் கொடுப்பார் எனவும் முனியசாமி விசாரணையில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், Zomato-வில் போதை மாத்திரைகள் எடுத்துச் சென்றால் காவலர்களுக்கு சந்தேகம் வராது என்பதால், தான் பணத்திற்கு ஆசைப்பட்டு போதை மாத்திரைகளை டெலிவரி செய்து வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களாக இந்த வேலையை செய்துவருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ராஜி என்பவர் தன்னிடம் போதை மாத்திரைகள் கொடுப்பார் எனவும், போதை பொருள் எங்கிருந்து அவர் வாங்குவார் என்று தனக்கு தெரியாது எனவும் முனியசாமி போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முனியசாமியை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து நைட்ரோவெட் 510 மாத்திரைகள், டைடெல் 100 மாத்திரைகள் என 610 மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜி என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.