பாலியல் துன்புறுத்தி தூக்கில் தொங்கவிடப்பட்ட சிறுமிகள் – கொந்தளித்த கேரள முதல்வர்.

இரண்டு மாத இடைவெளியில் ஒரே வீட்டில் இரண்டு சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் கேரளா மாநிலத்தையே உலுக்கி உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு பின் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் அட்டப்பள்ளம் பகுதியில் சகோதரிகளான இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி 14 வயதான சிறுமி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அது தற்கொலை என்றரீதியில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் 9 வயதான தங்கையும் 2017 மார்ச் மாதம் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இரண்டு மாத இடைவெளியில் ஒரே வீட்டில் இரண்டு சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம் கேரளத்தையே உலுக்கியது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது.

வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள்

இந்தவழக்கு குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதற்கட்டமாக சிறுமிகளின் தாய்வழி உறவினரான மது என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறுமிகளின் தந்தையின் நண்பரான இடுக்கியைச் சேர்ந்த ஷிபு என்பவர் கைது செய்யப்பட்டார். போக்‌ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் இரண்டுபேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமிகள் தூக்கில் தொங்கிய வீட்டின் உத்திரம் அவர்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. அதேபோல், முதல் சிறுமி கொல்லப்பட்ட சமயத்தில் முகத்தில் மாஸ்க் அணிந்த இரண்டுபேர் வீட்டிலிருந்து வெளியேறியதைப் பார்த்ததாக இரண்டாவதாக இறந்த சிறுமி கூறியிருந்தார். இதற்கிடையில் முதல் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த போலீஸார் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை மறைத்ததாகவும் புகார் எழுந்தது.

`இந்த வழக்கில் சரியான தெளிவு இல்லை’ என ஒருவர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் சிறுமிகள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் மூன்றுபேரை கடந்த மாதம் 25-ம் தேதி கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான். அதுகுறித்து ஜுவனைல் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

சகோதரிகளான சிறுமிகள் வழக்கில் காவல்துறை விசாரணை முறையாக நடத்தி ஆவணங்களை வழங்கவில்லை' என்று ஒருதரப்பினர் குற்றம்சாட்டினர். அதேசமயம்,அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்காததால்தான் இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிட்டனர்’ என்று காவல்துறை தரப்பு கூறிவருகிறது.

இந்தநிலையில் வாளையார் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் லதா ஜெயராஜை, அரசு வக்கீல் பதவியிலிருந்து நீக்கி கேரள முதல்வர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வாளையார் வழக்கை விசாரித்த காவல்துறையினர் மீதும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என சிறுமிகளின் பெற்றோர் கோர்ட்டை நாடினால் நாங்கள் எதிர்க்கமாட்டோம். மேல் முறையீடு செய்யும்போது மீண்டும் விசாரணை நடத்தப்படும்” என்றார் உறுதியான குரலில்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

One thought on “பாலியல் துன்புறுத்தி தூக்கில் தொங்கவிடப்பட்ட சிறுமிகள் – கொந்தளித்த கேரள முதல்வர்.

  • நம்ம ஊரா இருந்தா எடப்பாடியும் பன்னீரும் விளக்கு புடிச்சுருப்பான்ங்க.

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே