விழுப்புரத்தில் குழிக்குள் விழுந்த சிறுமியை மீட்ட இளைஞர்கள்!

விழுப்புரம் அருகே 10 அடி ஆழம் கொண்ட குறுகலான அஸ்திவாரக் குழிக்குள் விழுந்த 4 வயது சிறுமியை இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். 

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில் சரோஜா என்பவர், வீடு கட்டுவதற்காக, ஒரு அடி சுற்றளவில் அஸ்திவார குழிகளை தோண்டி வைத்திருந்தார்.

வீடு கட்ட தாமதமானதால் அந்த குழிகளை மூடாமல் அப்படியே வைத்திருந்துள்ளனர்.

அங்கு விளையாடிய புதுச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது மகள் கோபிணி, அந்த குழிக்குள் தவறி விழுந்தார். 

குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட இளைஞர்கள், போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.

எனினும், அவர்கள் வரும் வரை காத்திராமல் களமிறங்கிய அப்பகுதி இளைஞர்கள், பொக்லைன் உதவியுடன் அந்த குழிக்கு அருகிலேயே பள்ளம் வெட்டி, சிறிது நேரத்திலேயே சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

இது போன்ற தருணத்தில் பொதுமக்கள் குழிக்கு அருகில் பெரும் அளவில் கூடி இருந்து மண் சரிவை ஏற்படுத்தாமல் இருந்தாலே விரைவாக குழிக்குள் விழுந்தவர்கள் உயிருடன் மீட்க இயலும் என்று சுட்டிக்காட்டும் தீயணைப்பு வீரர்கள்.

இது அஸ்திவார குழி என்பதாலும் ஆழம் குறைவு என்பதாலும் இளைஞர்களின் வேகம் கை கொடுத்துள்ளது என்றும்; போர்வெல் போன்ற ஆழமான குழிக்குள் இது போன்று யாரேனும் தவறி விழுந்தால் கூட்டத்தை அகற்றி விட்டு தக்க பாதுகாப்புடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் தீயணைப்பு வீரர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே