ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..

சு.பொ.அகத்தியலிங்கம்

ஒவ்வொரு மாநிலமாய் போராட்ட அலை பரவிக் கொண்டிருக்கிறது. 144 தடை ஆணைகள், இண்டெர்நெட் முடக்கம், மாணவர்கள் இளைஞர்கள் உறுதியோடு இந்து முஸ்லீம் ஒற்றுமை முழக்கத்தோடு வீதியில் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.

இப்படி எதிர்ப்பின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், காலையில் வாட்ஸ் அப் செய்தி ஒன்று என்னை வெகுவாக கொதிக்க வைத்தது .

“இதுவே உண்மை.. புரிந்தால் நன்மை..
நம்ம வீட்டை ஏன் சாத்தியே வைக்கிறோம். திறந்து வச்சிருந்தா கண்ட நாயெல்லாம் உள்ள வந்திடும் என்பதால்தானே….
இதுதாங்க குடியுரிமை மசோதா..!”

இதை அனுப்பியவர் பாஜக அனுதாபி. இது எவ்வளவு அபத்தமானது என்பதை இங்கு உரிய இடத்தில் ஆய்வோம். அவர் மட்டுமல்ல தொலைகாட்சி விவாதத்தில் பல ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகளும் கிட்டத்தட்ட இதைப் போலவே வாதிடக் கேட்கிறேன்.

செல்லா நோட்டு அறிவிப்பின் போதும் இதுபோல் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதங்களை முன் வைக்கக் கேட்டோம். “இது கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்க – தீவிரவாதத்தை ஒழிக்க – இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப்ஸ் இருக்கு பதுக்கினால் கண்டு பிடிக்கலாம். பத்து நாளில் உங்கள் சிரமம் தீரவில்லை என்னை தூக்கில் போடுங்களென பிரதர் ஆவேசம்…”

ஆனால் அனுபவம் என்ன அனைத்தும் பொய்; கள்ளப்பணமோ, கறுப்புப்பணமொ குறையவில்லை. தீவிரவாதம் குறையவில்லை. பத்து நாளல்ல இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் அதன் கொடூரத்தாக்கம் நம்மை இன்னும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

இப்போது குடியுரிமை சட்ட திருத்தம் [CAA], தேசிய குடியுரிமை பதிவேடு[NRC] என இரட்டைத் தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது. இரண்டையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது. ஒன்றின் தொடர்ச்சியே இன்னொன்று இரண்டும் விஷமே !

அதற்கு முன்னால் இரண்டு விவரங்கள் பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும். 
ஒன்று – அகதிகள்; இரண்டு – ஊடுருவல்காரர்கள்

ஒரு நாட்டில் இயற்கைப் பேரழிவோ, யுத்தமோ, உள்நாட்டு கலவரமோ ஏதோ ஒரு நெருக்கடியான சூழலில் அங்கு வாழ முடியாமல் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுபவர்கள் அகதிகளாவர். இவர்களில் பெரும்பாலோர் நிலைமை சீரடைந்ததும் திரும்பிச் சென்றுவிடுவர். ஒரு பகுதியினர் அங்கு வாழ்வாதரத்தை இழந்து விட்டதால் தஞ்சம் புகுந்த நாட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவர். இது ஒரு பெரும் சவால், இதற்கான சர்வதேசச் சட்டங்கள் உண்டு.

அடுத்து ஊடுருவல்காரர். இதில் கெடு நோக்கோடு அழிவுத் திட்டத்தோடு ஊடுருபவர்கள். இன்னொரு சாரார் வயிற்றுப் பிழைப்புக்காக சட்ட விரோதமாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுகிறவர். இவை இரண்டும் இன்னொரு வகை சவால்.

இரண்டும் குறித்து அரசின் கொள்கை என்ன ? தெளிவாக்கப்படவில்லை. இது குறித்து மேலும் தேவைப்படும் போது இங்கு பேசுவோம். இப்போது சட்டத்திற்கு போவோம் .

குடியுரிமை திருத்த சட்டம் CAA என்பது ஏற்கெனவே இந்தியாவில் அமலில் உள்ள 1955 ஆம் ஆண்டு சட்டத்தில் செய்யப்படும் திருத்தமாகும். முந்தைய சட்டப்படி 1947 ஆகஸ்ட் 15 க்கு பிறகு – இந்தியா பாகிஸ்தான் பிரிந்த பிறகு இந்தியாவில் வாழ்கிற அனைவரும் – அவர் எந்த மதத்தைச் சார்ந்தவரும் இந்திய குடிமக்களே ! இப்போது செய்யப்படும் திருத்தம் என்னவெனில் 2014 டிசம்பர் 31-க்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி, சமணர், புத்தர் ஆகிய மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லீம் மதம் சேர்க்கப்படவில்லை.

ஒன்று, மத அடிப்படையில் இச்சட்டம் குடிமக்களைப் பிரிப்பதால் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் சட்டத்திற்கு முரணானது.

இரண்டு, இந்து என்று சொல்லும் போது இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளில் பெரும்பாலோர் இந்துக்களே அவர்களுக்கு ஏன் இல்லை ?

மூன்று, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லை நாடு அகதிகள் வருவது இயல்பு. ஆனால் தொடர்வே இன்றி ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டு, இலங்கை தவிர்க்கப்பட்டது ஏன் ? சீனா, நேப்பால், மியான்மர், பூட்டான் போன்ற எல்லை நாடுகள் தவிர்க்கப்பட்டது ஏன் ?

நான்கு, இந்து ராஷ்டிரமே எங்கள் இறுதி இலக்கு என ஆர்.எஸ்.எஸ் சர்வ்சங்சாலக் மோகன் பகத் கூறுவதற்கும் –  இந்து நாடு என நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக அமைச்சர்களும் எம்பிக்களும் ஊளையிடுவதற்கும் – இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவோர் யாரென அவர்கள் உடையே காட்டிக்கொடுக்கிறது என பிரதமர் மோடியே சொல்வதற்கும் பின்னால் ஒழிந்திருப்பது முஸ்லீம் மீதான வெறுப்பும் அவர்களை ஒழித்துக்கட்டும் திட்டமும் தவிர வேறென்ன ? அதன் முதல் படிதானே இந்தச் சட்டம். தேசிய குடியுரிமை ஆவணம் அடுத்து தொடரும் பெரும் தாக்குதல்.

அமித்ஷா சொன்னது சரிதானா? குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா “1947-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 3.7 சதவிகிதமாக குறைந்து விட்டது” என்று கூறியிருந்தார்.
ஆனால், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்) பிரிந்துவிட்ட பிறகு, மேற்கு பாகிஸ்தானில் (இன்றைய பாகிஸ்தான்) சிறுபான்மையினரின் மக்கள் தொகை எப்போதுமே 23 சதவிகிதமாக இருந்ததில்லை என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் 1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 2.83 சதவிகிதமாக இருந்தது. 1972-ஆம் ஆண்டு அது 3.25 சதவிகிதமானது. இதுவே 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 3.30 சதவிகிதமாகவும், 1998-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3.70 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு நாடாளுமன்றத்திலேயே இப்படி கூசாமல் பொய் சொல்லும் போது அவர்களின் எந்த வாக்குறுதியையும் ஏற்கமுடியுமா என்பதே கேள்வி.

அந்த நாடுகளில் இந்துக்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் இந்து நாடான இந்தியாவுக்குத்தானே வர முடியும்  என சிலர் வாதிடுகின்றனர். முதலில் ஒன்று இந்தியா இந்து நாடல்ல. இந்தியா எல்லா மதநம்பிக்கையாளருக்கும், மத நம்பிக்கை அற்றவருக்குமான நாடு. இந்திய அரசியல் சட்டம் அப்படித்தான் வரையறை செய்துள்ளது. இரண்டு அங்கு மத அடிப்படையில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டதாக ஆதாரம் என்ன..? வெறும் வாய்க்கதை போதாது .சர்வதேச மனித உரிமை ஆணையம் அல்லது நம்பத்தகுந்த அது போன்ற அமைப்புகளின் அறிக்கை ஏதேனும் உள்ளதா ? பாகிஸ்தானில் ஹமதியா பிரிவினரும் சிறுபான்மையோர்தானே அதனை ஏன் சேர்க்கவில்லை.

ஊடுருவியோர் அனைவரும் முஸ்லீம்கள், தீவிரவாதிகள் என்ற கதையை அசாம் மறுக்கிறதே. அங்கு நடப்பதென்ன..? அசாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC)படி மொத்தம் 19 லட்சம் பேர் குடியுரிமையை அற்றவர்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 லட்சம் பேர் இந்துக்கள், 7 லட்சம் பேர் முஸ்லிம்கள். முஸ்லீம்களை மட்டும் வெளியேற்றுவோம்; இந்துக்களை அல்ல எனச் சொல்வதால்தான் இப்போது அசாம் கொதிக்கிறது.

இலங்கையிலிருந்து வந்தோர் போராளிகள், தீவிரவாதிகள் என்று நழுவுவது சரியல்ல. லட்சக்கணக்கானோர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக வந்தவரே. சாதாரண உழைப்பாளி மக்களே. புலிகளுக்கு ஆயுதம், பணம் உட்பட உதவும் பலர் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதும், குடியுரிமை பெற்றோராய் இருப்பதும் ரகசியம் அல்ல. ஆனால் இங்கு வந்துள்ள மொத்த தமிழரையும் ஒரே அடியாய் நிராகரிப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆரம்பத்தில் சுட்டிய நாய்வாதத்தை அசை போடுங்கள். இந்திய எல்லை என்ன திறந்தா கிடக்கிறது ? அரசுக்குத் தெரியாமல் – அரசு அனுமதிக்காமல் எந்த நாயும் உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது. வீட்டுக்குள் நெடுங்காலமாய் குடியிருக்கிற மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கும் நாய் எது என்பதே கேள்வி.

இப்போது தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு வருவோம். இந்தியாவில் விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் குடியுரிமை பதிவேடு இல்லை என்பது வெட்கக்கேடு இல்லையா ? அசாமில் உருவாக்குவது போல் இந்தியா முழுவதும் உருவாக்கினால் என்ன தப்பு என கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம், பல பண்பாடு கொண்ட நாட்டில் இப்படி ஒரு பதிவேட்டை உருவாக்க அதற்குரிய பரந்த அணுகுமுறை தேவை. இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து பிறப்பு இறப்பு பதிவேடு உள்ளது. வேறு பல அரசு ஆவணங்களும் உள்ளது. ஆனால் அரசின் நோக்கம் பதிவேட்டை உருவாக்குவது அல்ல. மக்களை பிளவு படுத்துவதே.

முதலில் இந்தியா ஒற்றை நாடல்ல, பல மாநிலங்களின் ஒன்றியம். மோடி பாரதப் பிரதமரல்ல இந்திய ஒன்றியத்தின் பிரதமரே. மத்திய பட்ஜெட் அல்ல. ஒன்றிய பட்ஜெட்டே. இதுதான் அரசியல் சட்டப்படியான நிலை. நடை முறைக் குழப்பத்திற்கு அரசியல் சட்டம் பொறுப்பல்ல.

அசாம் பிரச்சனை வங்க தேசப்பிரிவினையைத் தொடர்ந்து வந்த பிரச்சனை. அதனை அணுக வேண்டிய விதத்தில் காங்கிரஸ் ஆட்சியும் அணுகவில்லை. பாஜகவும் அணுக வில்லை. வட கிழக்கை எல்லா ஆட்சியும் புறக்கணித்தே வருகின்றன. ஆக அங்கு தேவை அம்மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற அணுகுமுறையே.

குடியுரிமை பதிவேட்டில் பதிவது நல்லதுதானே ஏன் எதிர்க்கிறீர்கள் எனக் கேட்கின்றனர், அப்பதிவேட்டில் இடம் பெற ஒவ்வொருவரும் தான் இந்தியக் குடிமகன் என்பதை நிருபீக்க வேண்டும்.

கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஆதார் கார்டு உள்ளதே நீட்டலாமே ! போதாது. சிறுநீர் கழிப்பது முதல் சுடுகாட்டில் பிணமாய் எரிவதுவரை ஆதாரை கட்டாயமாக்கின அரசு குடியுரிமைக்கு அது போதாது என்கிறது.

உன் பிறந்த தேதிக்கு சான்று, பிறந்த இடத்துக்கான சான்று மட்டுமல்ல உன் அப்பா பிறந்த தேதிக்கும் சான்று வேண்டும். சொத்துச் சான்று வேண்டும். சொத்து இல்லாதவர் சொத்து உள்ளவரின் கொடிவழி உறவுச் சான்று வேண்டும். இவை எல்லாம் பெரும்பாலான மக்களுக்கு நடை முறை சாத்தியமற்றது. கலப்பு மணம் புரிந்தோர், சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளானோர், சிறுபான்மையோர் இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர். இந்தியாவில் வர்ணாஸ்ரம அடிப்படையில் சாதியக் கொடுங்கோன்மையில் சொத்து வைத்துக் கொள்ளவே எல்லா சாதிக்கும் உரிமை இருந்ததில்லை. மேல்தட்டு சாதியிடம் சொத்து குவிந்தும் அடிதட்டு சூத்திர தலித் பிரிவினர் உழைப்படிமையாகவுமே இருந்தனர். குடிமனைப் பட்டாவே பெரும் போராட்டம். இங்கு சொத்துவழி குடியுரிமை நிரூபணம் என்பது மந்திரத்தால் மாங்காய் விளைவிக்கும் மோசடியே !

இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பில்லை என்பதும் வடிகட்டிய பச்சைப் பொய்யே. வெளிநாட்டு தீவிரவாதிகள் ஆட்சியாளரோடு உறவு உள்ளவரே, தாவூத்கானிடம் பாஜக தேர்தல் நிதியே வாங்கி உள்ளது. முன்பு போல் தாவூத்கானை இந்தியா கொண்டுவா என அவர்கள் இப்போது கூப்பாடு போடாமலிருப்பது இந்த பண உறவினால்தான்.

உடையை வைத்து போராடுகிறவன் அந்நியன் எனச் சொல்கிற பிரதமர் இந்திய முஸ்லீமைத்தானே சுட்டுகிறார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது லட்சக் கணக்கான முஸ்லீம் வாக்காளர் பெயர் பட்டியலில் திடீரெனக் காணாமல் போனதும் தற்செயலானது அல்ல.

இந்திய அளவில் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் முஸ்லீம்கள் எண்ணிக்கை பெருமளவு வீழ்ந்திருப்பதும்; உள்ளாட்சி அளவில் வார்டு முதற்கொண்டு முஸ்லீம் வெற்றிபெற வாய்ப்புள்ள இடங்கள் பிய்த்து எறியப்படுவது பாஜக பினாமி எடப்பாடி ஆட்சியில் அரங்கேறுகிறது. சமஸ்கிருதம் கற்பிக்கப்போன முஸ்லீம் பேராசிரியரை எதிர்த்து கலவரம் செய்கிறார்கள். தாஜ்மகாலை உடைக்க வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசு உள்நாட்டு சுற்றுலாத் திட்டமே பெரும்பாலும் இப்போது தாஜ்மகாலை கண்டு கொள்ளாமல் தவிர்க்கிறது. மாட்டுக்கறி உணவை தட்டிப்பறிப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியில் முஸ்லீம் அழித்தொழிப்பே மோடி அமித்ஷா நோக்கம்.

இந்திய முஸ்லீம்களுக்கோ இந்திய பிற குடிமகன்களுக்கோ பாதிப்பில்லை என மோடியும் அமித்ஷாவும் சொல்வது நம்பத் தகுந்தது அல்ல. போராடும் அத்தனை பேரையும் அந்நியர் என முத்திரை குத்தும் இவர்கள் சொல்லும் வாக்குறுதி மோசடியே.

நித்தியானந்தா, கடன்கார மோடி போன்றோர் பாஸ்போர்ட் இல்லாமலே வெளியேற முடிகிறது. ஆனால் முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமதுவின் வாரிசுகள் ஆவணம் இல்லை எனச் சொல்லி நாடற்றோர் பட்டியலில். கார்க்கில் யுத்தத்தில் ஈடுபட்டு காயம் பட்டு விருது வாங்கிய ராணுவ அத்காரு முஹமது சானா உல்லா  நாடற்றோர் பட்டியலில் இது ஏன் ?

இந்தியாவில் காசு, பணம், அரசு செல்வாக்கு உள்ளோர் எந்த ஆவணத்தையும், சட்டத்தையும், நீதியையும் விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் பக்கம் எவ்வளவு நியாயம் இருப்பினும் ஏழை சொல் அம்பலம் ஏறாது. இதுவே உறுத்தும் உண்மை. ஆகவேதான் இரு சட்டமும் தேவை இல்லை. செல்லா நோட்டு போல் பெரும் தீங்கையே விளைவிக்கும் என்கிறோம்.

சொத்து ஆவணத்தை அல்லது அது சார்ந்த ஒப்புகையை ஆதாரமாகக் கொண்டு குடியுரிமையைத் தீர்மானிக்கும் அரசே ! இரு நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் சொத்து ஆவணம் எதிலும் இந்து என்ற சொல்லே கிடையாது; சிவ மதம், வைணவம் என பல உண்டு; கர்நாடகாவில் லிங்காயத் போன்ற சொல்லே உண்டு, குஜராத்திலும் பாசுபதம் போன்ற சொற்களே உண்டு. ஆகவே இந்து என்பதே வெள்ளைக்காரன் நம்மில் புகுத்திய வகைப்படுத்தலே. (பிரிட்டிஷ் ஆட்சியில் செய்யப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது)
முகநூலில் முத்துகிருஷ்ணன் என்பவர் பதிவிலிருந்து;
உண்மையில் இது அனைவரையும் பாதிக்கும் முன்பு எப்படி கருப்பு பணம் இல்லாதவர்கள் தன்னிடம் இருப்பது வெள்ளை பணம் என்று *நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோ அதே போன்று* இப்போதும் ஒவ்வொருவரும் தாங்கள் அகதிகள் அல்ல எங்கள் தாத்தா பாட்டி இங்கு தான் பிறந்து வளர்ந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முன்பு பேங்க் ஏடிஎம் வாசலில் நின்றோம் இனி அரசு அலுவலகங்கள் அல்லது குடியுரிமை கேம்ப் முன்பு தாத்தா பாட்டியோட பர்த் சர்டிபிகேட் அல்லது தாத்தாவோட முக்கியமான அரசு ஆவணத்தை கையில் வைத்துக் கொண்டு *நிற்க வேண்டி வரும்*.

உங்கள் முன்னோர்களின் ஆவணங்களை சரிபார்க்க வரும்போது அல்லது உங்களை வரச் சொல்லும்போது நீங்கள் செல்ல முடியவில்லை அல்லது ஆவணங்கள் இல்லை என்றால் தேசிய குடிமக்கள் ஆவணத்தில் உங்கள் பெயர் இருக்காது, அப்படி விடுபட்டவர்கள் அகதிகளாக கருதப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.
கசப்பான உண்மை என்னவென்றால் 90-களுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பர்த் சர்டிபிகேட் இருக்காது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தான் பர்த் சர்டிபிகேட் ஆக கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் தாத்தா பாட்டியோட பர்த் சர்டிபிகேட் எத்தனை பேரால் சமர்ப்பிக்க முடியும்? படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் படிக்காத கோடிக்கணக்கான மக்கள் ரோட்டோரம் வாழ்கின்ற மக்களின் நிலை என்னவாகும்.

முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கசப்பான செய்தி என்னவென்றால் அசாமில் ஆவணம் சமர்ப்பிக்க முடியாத 19 லட்சம் பேரில் 16 லட்சம் பேர் இந்துக்கள் அவர்களில் வெறும் 31,411 பேர் மட்டும் தான் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று அரசு அறிவித்திருக்கிறது.
முன்பு தேசப்பற்றை நிரூபிக்க சொன்னார்கள் இப்போது நீ இந்திய குடிமகன் என்று நிரூபி என்கிறார்கள்.
இது புரியாமல் சிலர் இது முஸ்லிம்கள் மட்டும் சம்பந்தப்பட்டது என நினைத்து மகிழ்வது பரிதாபம்.

ஆகவேதான் நாடெங்கும் மக்கள் கொதிக்கிறார்கள். பல கொடுமைகளை மவுனமாக சகித்துக் கொண்டவர்கள் இப்போது ஏன் கொதிக்கிறார்கள் ?

குடியுரிமைச் சட்டத்தால் தீவிரவாதிகளை பிடிக்கலாம் என்போர் எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்தல் சொல்வோரே !

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் பாரம்பரியத்தை தூக்கி எறிந்து விட்டு எடப்பாடி கட்சி ஆதரிப்பது கேவலம். இதனால் தமிழக மக்களுக்கு நற்கருணையாக பல திட்டங்கள் கிடைக்கும் என்கிறார்கள் சில பேர். மோடியின் எல்லா துரோகத்துக்கும் எடப்பாடி அரசு துணை போனாலும் சகலத்திலும் தமிழும் தமிழகமும் புறக்கணிக்கப்படுவதே மெய்.

காஷ்மீர் பண்டிதர்களுக்காக இப்படி குரல் கொடுத்தீர்களா என்கின்றனர். அது நிலப் போராட்டத்தோடு தொடர்புடைய தனித்த பிரச்சனை. மேல்தட்டுப் பெண் பாலியல் வன்புணர்வின் போது கூப்பாடு போடும் அவர்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் அன்றாடம் வன்புணர்வுக்கு ஆவது பற்றி மூச்சுகூட விடுவதில்லை. நாம் பெண் என்ற பொது பார்வையே கோருகிறோம். பண்டிதர் பற்றி மட்டுமல்ல கிராமங்களில் சாதி வன்கொடுமை தாழாமல் நாடோடியாய் அலையும் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும் சமூக அக்கறையோடு பேசுவோம்.

மாணவர் போராடலாமா  மாணவருக்கு அரசியல் எதற்கு என்போர் ஏபிவிபி ஏன் என விளக்குவாரா ? கர்நாடகாவில் ஆர் எஸ் எஸ் நடத்தும் பள்ளியில் பாபர் மசூதி இடிப்பை மாணவர்களைக் கொண்டு நாடகமாக்கி ஜெய்ராம் ஸ்ரீ ராம் கோஷம் போட்டதைக் கண்டித்தாரா ? அரசியல் என்பது மாணவர், இளைஞர், தொழிலாளர், விவசாயி உள்ளிட்ட அனைவர் வாழ்வுரிமை தொடர்புடையது. அதைப் பற்றி பேசுவதும் போராடுவதும் கடமையே. விடுதலைப் போரில் மாணவரை காந்தியே அழைத்தாரே. இளவயதினரை குறிவைத்தே ஆர் எஸ் எஸ் மதவெறி பயிற்சி அளிக்கிறது.

இவை எல்லாம் ஏன் இங்கு சொல்லவேண்டி வந்தது எனில்; பாஜக ஆதரவு அறிவுஜீவிகள் தொலைகாட்சி விவாதங்களில் இப்படி பல குறுக்கு சால் ஓட்டுகின்றனர். இந்தச் சட்டங்களை முதலில் ஆதரித்த கட்சிகளெல்லாம் தொடர்ந்து பல்டி அடித்து எதிர்க்கின்றனர்; எடப்பாடியைத் தவிர.

காஷ்மீருக்கு உரிய நியாயமான உரிமை சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு அம்மாநிலம் திறந்த வெளிச் சிறைச்சாலை ஆக்கப்பட்ட போது அரசியல் விழிப்படைந்த ஒரு சாரார் மட்டுமே எதிர்த்தனர். காங்கிரஸ் ஆட்சி தொடங்கி இன்று வரை மக்களிடம் காஷ்மீரின் நியாயம் சொல்லப்படவே இல்லை. ஆகவே பெரும் போராட்டமாக பிற மாநிலங்களில் வரவில்லை.

பாபர் மசூதியில் நியாயம் நீதி படுகொலை செய்யப்பட்ட போதும்; தீர்ப்பு நியாயமில்லை எனினும் பிரச்சனையை முடிச்சுக்கோங்க என்கிற மனோநிலையில் மக்கள் அமைதி காத்தனர்.

ஆனால் இப்போது எல்லா கோவமும் மொத்தமாய் பீறிட்டெழுகிறது. எங்கும் போராட்ட அலை எழுகிறது.

முஸ்லீம்களை எதிர்க்கவே இந்து ஒற்றுமை என பரந்த ஐக்கியம் பேசுகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் மீதான துடைத்தழிப்பு வெற்றி பெற்றால் அதன் பின் பிராமணிய, சத்திரிய, வைசிய, சூத்திர மற்றும் பஞ்சமர் தலித்தான். மநுதர்மர் சொல்வதென்ன சூத்திரரின் கடமை தன் மேலுள்ள மூன்று வர்ணத்துக்கும் தொண்டூழியம் புரிவதே ! அவர்கள் நோக்கம் அதுவே. ஆக சதி ஆழமானது.

ஹிட்லர் வரலாறு சொல்வதென்ன ? பாசிசம் வெற்றி பெறாது; ஆயின் சீக்கிரம் வீழாது. பேரழிவை நிகழ்த்தாமல் ஓயாது.

ஆகவே நெடிய சோர்வற்ற போராட்டத்தை அரசியல் களத்திலும், தத்துவக் களத்திலும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விடுதலைப்போரின் பாரம்பரியத்தையும், சமூக சீர்திருத்த இயக்க பாரம்பரியத்தையும் உள்வாங்கி; இரண்டிலும் பங்குபெறாத ஆர்.எஸ்.எஸ் யை தூக்கி தவிடு பொடியாக்கிட மதச்சார்பின்மை,சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

9 thoughts on “ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..

  • உங்கள் வாதத்தில் உள்ள உண்மையும் புண்ணும்
    உண்மை.
    இந்தியா போன்ற பல மொழி, பல இனம், பல மதம், பல பண்பாடு கொண்ட நாட்டில் இப்படி ஒரு பதிவேட்டை உருவாக்க அதற்குரிய பரந்த அணுகுமுறை தேவை. இந்தியா விடுதலை அடைந்ததில் இருந்து பிறப்பு இறப்பு பதிவேடு உள்ளது. வேறு பல அரசு ஆவணங்களும் உள்ளது.
    முரண்
    கசப்பான உண்மை என்னவென்றால் 90-களுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பர்த் சர்டிபிகேட் இருக்காது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தான் பர்த் சர்டிபிகேட் ஆக கருதப்படுகிறது. அப்படியிருக்கையில் தாத்தா பாட்டியோட பர்த் சர்டிபிகேட் எத்தனை பேரால் சமர்ப்பிக்க முடியும்? படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் படிக்காத கோடிக்கணக்கான மக்கள் ரோட்டோரம் வாழ்கின்ற மக்களின் நிலை என்னவாகும்.

    Reply
  • மிக எளிமையான முறையில் அனைவரும் அறியும் வண்ணம் ஆர்எஸ்எஸ் கூட்டணியின் மக்கள் விரோத கொள்கைகளை புள்ளிவிவரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளது இந்த கட்டுரை.
    EVM பற்றியும் தங்களிடம் இருந்து ஒரு தொகுப்பு கட்டுரை எதிர்பார்க்கிறேன்
    நன்றி தோழர்.

    Reply
  • ஹிட்லர் வரலாறு சொல்வதென்ன ? பாசிசம் வெற்றி பெறாது; ஆயின் சீக்கிரம் வீழாது. பேரழிவை நிகழ்த்தாமல் ஓயாது. 100% Unmai

    Reply
  • மிகத் தெளிவான கட்டுரை.
    தெளிவாக்கும் கட்டுரை.
    CAA – NRC ஆதரவாளர்கள்
    அவசியம் வாசிக்கவேண்டும்.

    Reply
  • தெளிவாக, யாவரும் புரிந்துகொள்ளும்படி எளிதாக எழுதியுள்ளீர்கள், ஐயா.
    யார் வாசிக்கிறார்கள், யார் எண்ணுகிறார்கள், யார் புரிய வைக்கிறார்கள்? இதை எண்ணும்போதுதான் கவலை பெருகுகிறது. இருப்பினும், நன்றி, நல்வாழ்த்துகள்.

    Reply
  • That matter is for birth certificate in father and mother .Other wise dustbin children what can do poff religion May Indians or other Countries religion or religion Citizens which…….

    Reply
  • Pingback:

  • நல்ல ஆழமான, நிதானமான அணுகுமுறையில் அலசி எழுதப்பட்ட கட்டுரை. தீவிரவாதியிடம் காசு வாங்கிய கட்சி என்பது போன்ற சில தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன. ஆனால், இந்த சதிகளுக்கெல்லாம் மோடி, அமித் ஷா, சங்கப் பரிவாரம் மட்டுமே காரணமல்ல வேறு சில சக்திகள், குறிப்பாக சர்வதேச ஏகாதிபத்ய சக்திகள் பின்னால் இருந்து இயக்குகின்றன என்பதையும் மறக்க வேண்டாம். காந்தி கொலை, இந்திரா காந்தி கொலை, ராஜீவ் காந்தி கொலை எல்லாவற்றின் பின்னால் உள்ள சக்திகள் என்பது என் சந்தேகம். எனக்கென்று ஒரு தனிக் கருத்து உண்டு. உங்களது கருத்தை அழகாக எளிதாகப் புரியும் வண்ணம் எழுதியிருப்பதை நெஞ்சார வரவேற்கிறேன் அகத்தியலிங்கம் சார்!

    Reply
  • yes

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே