போலீஸ் தாக்கியதால் கூலித் தொழிலாளி தற்கொலை – தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளியான கணேசமூர்த்தி என்பவர் காவல் துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட காயம் மற்றும் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் தாக்கப்பட்டதில் இறந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரலைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் காவல் துறையினர் தாக்கியதால் மற்றொருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு மது பருகிவிட்டு சாலையில் நடந்து வந்திருக்கிறார் கணேசமூர்த்தி. அப்போது போதை தள்ளாட்டத்தில் சாலையிலேயே கீழே விழுந்துவிட்டார். தகவல் கிடைத்த போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து கணேச மூர்த்தியைக் கடுமையாகத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. கணேச மூர்த்தியின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இந்த நிலையில, நேற்றிரவு தன்வீட்டில் இருந்த கணேசமூர்த்தி திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

” கணேசமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணம் போலிசார் தான். அவர்கள் கடுமையாகத் தாக்கியதால் தான் வலி தாங்கமுடியாமலும், அவமானத்திலும் கணேச மூர்த்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணேசமூர்த்தியின் உடலில் போலிசார் அடித்த காயங்கள் இருக்கின்றன” என்கிறார்கள் அவரது உறவினர்கள்.

இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தரப்பில் விசாரிக்கையில், “கணேச மூர்த்தி மதுகுடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடந்த தகவல் கிடைத்தது. உடனே, உளவுத்துறை போலிசார் ஒருவருடன் இரண்டு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்ததில் அடிபட்டுக் கிடந்தவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். அதற்குப் பிறகு என்ன நடந்தது” என்று எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே