அற்புதம், அதிசயம் நிகழும் : விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.!

நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது, தேர்தல் நேரத்தில் சுனாமியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பேசி வருகிறார்.

அண்மையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.

அதன்பின்னர், சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை, இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மக்கள் மத்தியில் புரட்சி அலையை ஏற்படுத்த வேண்டும், அதன் பின்னர் வருகிறேன் என கூறினார்.

அவரது இந்தப் பேச்சு குறித்த விவாதம் இன்னும் நடந்துகொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ரஜினி, கக்கன் அவர்களின் இன்னோரு உருவம் நல்லக்கண்ணு. அப்படிதான் பார்க்கிறேன்.

அலை வந்தால்தான் ஒரு எழுச்சி வரும். எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தார். அவர் ரொம்ப நல்லவர். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்.ஜி.ஆர் பங்கு முக்கியமானது.

திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் தூக்கி எறியப்பட்டதில் அனுதாப அலை வந்தது. அதனால், அவர் வெற்றி பெற்றார்.

1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை நேரம், திமுகவுக்கு எதிரான அலை வந்தது. அதனால்தான் ஜெயலலிதா முதல்வர் ஆனார் என்று கூறினார்.

அத்துடன், நான் போட்ட அரசியல் புள்ளி தற்போது ஒரு சுழலாக உருவாகியுள்ளது.இதை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. வலுவான அலையாக மாற வேண்டும்.

அந்த அலை தேர்தல் நெருங்க, நெருங்க கரையை கடந்துகொண்டு தான் இருக்கும். தேர்தல் வரும்போது அரசியல் சுனாமியாக மாறும்.

இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடம் தான் இருக்கிறது.

இதனால் வரும் தேர்தலில் அற்புதம், அதிசயம் நிகழும் என்று ரஜினிகாந்த் மீண்டும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே