பயிர்க் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களின் நிலுவை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதிசட்டப்பேரவையில், கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் நிலுவைரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அந்த அறிவிப்புக்கான அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல், இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன் விவரங்கள், கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகம் சார்பில் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல்பதிவாளர் மற்றும் மண்டல இணை பதிவாளர்கள் உரிய படிவத்தில் தகவல் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் இதரகூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விவரங்களை சென்னைமண்டல கூடுதல் பதிவாளர்மற்றும் மண்டல இணை பதிவாளர்களும் அனுப்பும்படி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கரோனா காரணமாக பல்வேறு சுய உதவிக்குழுக்கள் கடன்களை செலுத்தமுடியாத நிலையில் உள்ளதாக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

மேலும், தனியார் வங்கிகள் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நெருக்கடி தருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன் விவரங்கள், நிலுவை விவரங்கள் கோரப்பட்டுள்ளதால், சுயஉதவிக் குழுக்களின் கடன்களும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே