திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரச்சார நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது அவர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை பெற்றுள்ள நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

அதேபோல், கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் என தெரிவித்தார். மேலும், பெண்களுக்கான கோர செயல்களுக்கு அதிமுக ஆட்சியில் முடிவே கிடையாது என்று புகார் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – காரமடை அருகில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க அமைச்சர் வேலுமணிக்கு முதலமைச்சர் பழனிசாமி குத்தகைக்கு விட்டுள்ளாரா? என விமர்சித்தார்.

மேலும், பாலம் கட்டினால் மட்டும் தான் துட்டு அடிக்க முடியும் என்பதால், தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாலம் கட்டத் தொடங்கி இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும்.

அரசாங்கத்தை விமர்சித்தால் கைது செய்வேன், நடவடிக்கை எடுப்பேன், மிரட்டுவேன், பொய் வழக்கு போடுவேன் என்றால் வேலுமணியின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? அமைதிக்குப் பேர் போன கோவையை கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய வேலுமணிக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே