“கணவன் யாருடன் இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” – னு கூறிய பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த சோகம்…

கணவரை உருகி உருகி காதலிக்கும் இப்படிப்பட்ட பெண்ணை கைவிட எப்படி மனசு வந்ததோ என காதலர் தினத்தன்று சமூக வலைத்தளங்களில் பரிதாபத்தை வாரிக் குவித்த பெண், விஷம் குடித்துவிட்டதாக வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதலித்து திருமணம் செய்த கணவன் தன்னை விட்டுச் சென்றதாக இளம் பெண் ஒருவர் காதலர் தினம் அன்று கொடுத்த பேட்டி இது..

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோதான் இது. காதலித்து கரம் பிடித்தவன் கைவிட்டாலும், கணவனுக்காக உருகும் இந்த பெண்ணை முன்மாதிரியாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் ஏராளம்.

தன்னை விட்டுச் சென்றாலும் தனது கணவன் அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியது.

அவரது காதல் உண்மை, புனிதம் என்று அவரது பேட்டியை புகழ்ந்து பகிர்ந்தனர்.

எத்தனையே டிக்டாக் பிரபலங்களுக்கு பல நாட்களில் கிடைக்காத புகழ், ஒரே வீடியோவில் இந்த பெண்ணுக்கு கிடைத்து.

பிரபலம் என்றாலே “பிராப்ளம்” என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த பெண்ணுக்கும் சிக்கல் டிக்டாக் வீடியோ வடிவில் வந்தது.

யாரோ ஒரு இளைஞனுடன் வேறு ஒரு பெண் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு, இப்படிப்பட்ட பெண்ணை கணவன் கைவிடாமல் என்ன செய்வான் என பதிவுகள் வெளியாகின.

அடுத்தடுத்த நாட்களில் அந்த பெண்ணின் டிக் டாக் வீடியோக்கள் சுற்றின. தனது தங்கையுடன் அவர் மகிழ்ச்சியாக ஆடிப் பாடி வெளியிட்டிருந்த டிக்டாக்குகளில் பலரும் அவரை திட்டித் தீர்த்தனர்.

ஆபாச வார்த்தைகள் அவரது டிக் டாக் கமெண்டுகளில் நிரம்பிக் கிடக்கின்றன.

ஒரே நாளில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய சமூக வலைத்தளங்கள், அதேவேகத்தில் தரையில் போட்டு மிதித்து விட்டதால் ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை என அந்த பெண் மீண்டும் ஒரு டிக்டாக் போட்டுள்ளார்.

வாயில் ரத்தம் வழிய, விஷத்தை குடித்துவிட்டதாக அந்த பெண் போட்டுள்ள டிக்டாக் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தானும் விஷம் குடித்துவிட்டதாக அந்த பெண்ணின் தங்கையும் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஊர், பெயரை உறுதிப்படுத்த முடியாத இந்த 2 இளம்பெண்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை.

ஆனால், டிக்டாக்கில் சிக்கி வாழ்வை சீரழித்துக் கொள்ளும் இளம்பெண்களுக்கு இந்த இரு பெண்களும் பாடம் என்பதுதான் நிதர்சனம்…

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே