பெட்ரோல் விலை உயர்வுக்கு யார்தான் பொறுப்பு..??

காதல் வந்தால் சொல்லி அனுப்பு… பெட்ரோல் இருந்தால் வருகிறேன்!” – இதுபோன்ற எண்ணற்ற மீம்ஸ்களும் கலாய்ப்புகளும் சமூக வளைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. ‘துன்பம் வரும்போது சிரிக்கலாம்’ என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் வகையில், மீம்க்கள் தங்களது ஆதங்கங்களை கொட்டி வரும் வேளையில், பெட்ரோல் விலைக்குப் பின்னால் இருக்கின்ற நுட்பங்களைப் புரிந்துகொண்டு இன்னும் வீரியமாக எதிர்வினையாற்றலாம்.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92-க்கு மேல் விற்பனையாகிறது.

ஆனால், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் லிட்டர் ரூ.100-க்கு மேல் சென்றுவிட்டது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் விலை மாறுபாட்டுக்கு காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை ஏற்றம்தான் விற்பனை விலை உயர்வுக்கு காரணமா?

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகள்தான் காரணமா? – இப்படி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
விலை மாறுபாடு ஏன்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் அல்லது மத்திய அமைச்சர்களிடம் கேட்டால், ‘மத்திய அரசு நிலையான வரியை விதிக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் வரி விகிதத்தில் ஏற்ற இறக்கம் உள்ளது.

அதனால் மாநில அரசுகள் வரியை குறைத்தால், அந்தந்த மாநிலங்களில் விலை தானாக குறைந்துவிடும்’ என கூறுவார்கள்.

மாநில அரசு வரியை குறைத்தால் பெட்ரோலின் சில்லறை விலை குறையும் என்பது உண்மை.

ஆனால், அது முழு உண்மை அல்ல.

மத்திய அரசின் உற்பத்தி வரி நிலையானது என்றாலும், பெட்ரோல் விலையில் முக்கியப் பங்கு வகிப்பது மத்திய அரசின் வரிதான்.

லிட்டருக்கு 33 ரூபாய் அளவுக்கு உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. (மேலும் அக்ரி செஸ் தற்போது விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அக்ரி செஸ்-சில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை) இதனை தவிர்த்து மாநில அரசுகளும் தங்களின் வருமானத்துக்கு ஏற்ப வரிவிதிப்பதால் சில்லறை விலை கூடுதலாகவே உள்ளது.

நாம் செலுத்தும் சில்லறை விலையில் சுமார் 60 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்துகிறோம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு?

கச்சா எண்ணெயின் விலை உயர்வும் ஒரு காரணம். ஆனால், அதுவே முழு காரணமல்ல. இந்தியாவின் தேவையில் சுமார் 85 சதவீதம் அளவுக்கு இறக்குமதியை நாம் நம்பி இருக்கிறோம் என்பதால், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யபடுகிறது.

தேவை குறைவு காரணமாக கடந்த ஏப்ரலில் சுமார் (ஒரு பேரல்) 19 டாலராக கச்சா எண்ணெய் சரிந்தது. அதன் பிறகு உயர்ந்து, பிறகு சரிந்து அக்டோபரில் சுமார் 36 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை இருந்தது.

தற்போது 60 டாலருக்கு மேல் கச்சா எண்ணெய் விலை வர்த்தகமாகிறது.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது போல தோற்றம் ஏற்பட்டு, இந்த விலை நியாயம் என தோன்றும். ஆனால், நிஜம் அதுவல்ல.

கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தபோதும் கூட சில்லறை விற்பனை விலை குறையவில்லை.

விலை குறைவாக இருந்தபோது பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ13-ம், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15-ம் உயர்த்தப்பட்டது.

இரு தவணைகளாக இந்த விலை ஏற்றம் இருந்தது. அதனால், சில்லறை விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் பழைய விலையிலே தொடர்ந்தது.

ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது உற்பத்தி வரியை குறைக்கவில்லை.

ஏற்கெனவே விதிக்கப்பட்ட உற்பத்தி வரி தொடர்வதால் தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதற்காக 2014-ம் ஆண்டு கச்சா எண்ணெய் பேரல் 100 டாலருக்கு மேல் இருந்தது. தற்போது 60 டாலருக்கு விற்கப்படுகிறது.

விலை குறையவேண்டுமே என்னும் தட்டையான வாட்ஸ் ஆப் மெசஜும் தவறு. அப்போது ஒரு டாலர் சுமார் 60 ரூபாய் அளவுக்கு வர்த்தகமானது.

தற்போது 72 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. பெட்ரோல் விலை நிலவரத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்றத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி எடுத்துக்கொண்டாலும் கூட பெட்ரோல், டீசல் மீதான வரி காரணமாகவே சில்லறை விலை அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

முந்தைய அரசு மீது குற்றமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளில் முந்தைய அரசு ஈடுபட்டிருந்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.
இதனை இப்படி புரிந்துகொள்ளலாம்?

மரபு சாரா எரிசக்தி முக்கியத்துவம் கொடுத்து மின்சார வாகனங்களை உருவாக்குவது அல்லது உள்நாட்டில் பெட்ரோலிய தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவது என இரண்டின் காரணமாக மட்டுமே பெட்ரோலிய இறக்குமதியை நாம் குறைக்க முடியும்.

இவை இரண்டுமே நீண்ட கால திட்டங்கள். தவிர, நம்மிடம் இல்லாத வளமான பெட்ரோலிய துறையில் எப்படி தன்னிறைவு அடைய முடியும்?

சர்வதேச அளவில் தற்போதுதான் மின் வாகனங்களுக்கான தேவை சிறிதளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முந்தைய அரசுகளை ஏன் குறை கூற வேண்டும்.

அதுவும் ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு?

2014-ம் ஆண்டு புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. (பார்க்க சார்ட்) இதன் முழு பலனையும் மத்திய அரசு அனுபவித்திருக்கிறது.

அதனால்தான் அப்போது (2014) ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.50 ரூபாய் அளவுக்கு மட்டுமே உற்பத்தி வரி இருந்தது. தற்போது 33 ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து என்ன?

வரியை குறைக்க முடியாது என அரசு சொல்லிவிட்டது. இந்த நிலையில், கேர் மற்றும் இக்ரா ஆகிய ரேட்டிங் ஏஜென்ஸியை சேர்ந்த சந்தை வல்லுநர்கள் வேறு வகையிலான கருத்துகளை பகிரத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் நல்ல லாபம் அடைந்திருக்கின்றன. இடைக்கால டிவிடெண்ட் கொடுத்திருக்கின்றன.

அதனால், எண்ணெய் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை குறைக்ககொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், கச்சா எண்ணெய் விலை உயரும்போது அந்த தாக்கத்தை எண்ணெய் நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கருத்து சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் இனி அதுதான் நடக்கும்.

தேர்தல் முடியும் வரையில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கக் கூடும். அதன்பிறகு வழக்கம் ஏற்ற இறக்கம் இருக்கும்.

`தலை விழுந்தால் நான் வெற்றிபெறுவேன். பூ விழுந்தால் நீ தோற்பாய்’ என்பது போல தோற்பது எப்போதுமே சாமானியர்கள்தான்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே