கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை எப்போது செய்து கொள்ளலாம்?

6 வாரங்களுக்கு குறைவாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மரணம் நிகழ்வதற்கான வாய்ப்பு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தை எதிர்நோக்காமல் அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்றால் எத்தனை நாட்களுக்கு பிறகு செய்து கொள்ளலாம் என்பது குறித்து புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

Anaesthesia என்ற மருத்துவ நூல் ஒன்றில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் 7 வாரங்களுக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. 6 வாரங்களுக்கு குறைவாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மரணம் நிகழ்வதற்கான வாய்ப்பு இரண்டரை மடங்குக்கும் மேலாக இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் கால வரம்பு குறித்து இதுவே முதல் முறையாக வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவு ஆகும். அக்டோபர் 2020 காலகட்டத்தில் உலகம் முழுவதும் 116 நாடுகளில் 140,231 கொரோனா நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட அவசர அறுவை சிகிச்சையை மையமாக வைத்து இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது, 0 முதல் 2 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் 4.0% ஆகவும், 3 முதல் 4 வாரங்களுக்குள் 4.0% ஆகவும், 5 முதல் 6 வாரங்களுக்குள் 3.6% ஆகவும் இருந்துள்ளது. அதே நேரத்தில் 7 முதல் 8 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் 1.5% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த தரவுகள் அனைத்து வயது சார்ந்தவர்களுக்கும் பொருந்துவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா அறிகுறிகளுடன் கூடியவர்களுக்கு 7 முதல் 8 வாரங்கள் காத்திருந்த போதிலும் இறப்பு விகிதம் 6.0% ஆகவும், கொரோனா அறிகுறிகள் மறைந்தவர்களுக்கு 2.5 % ஆகவும், அறிகுறிகள் இல்லாமல் இருந்தவர்களுக்கு .3% ஆகவும் இறப்பு விகிதம் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், எங்கள் ஆய்வு முடிவுகள் மூலமாக அறுவை சிகிச்சை தேவைப்படும் கொரொனா நோயாளிகள் 7 முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பது நல்லது, அறிகுறிகள் இருப்பவர்கள் அதற்கு மேலும் காத்திருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார். இருப்பினும் ஒவ்வொரு நோயாளியின் தன்மையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சையை தாமதித்து கொள்வது நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் மூளையில் கட்டி போன்ற மிகவும் இன்றியமையாத அறுவை சிகிச்சைகளை தாமதிப்பதில் அர்த்தம் இல்லை எனவும், பல லட்சக்கணக்கானவர்கள் தற்போது அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்பதால் அவர்களுக்கான அபாயம் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த ஆய்வின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே