புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தரவு..!!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், தனது தனியுரிமை கொள்கைகளில் அண்மையில் மாற்றங்களை கொண்டுவந்தது. அச்செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் தனியுரிமை தொடா்பான தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட உறுப்பு நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய கொள்கைக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. வழக்குகளும் தொடரப்பட்டன. இந்தச் சூழலில், புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ்ஆப் நிறுவனம் கைவிட வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் நேற்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் தனியுரிமை கொள்கையில் கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்கள், இந்திய குடிமக்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பயனாளா்களின் விருப்பம், தகவல் பாதுகாப்பு, தகவல் பறிமாற்ற தனியுரிமையையும் கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் நம்புகிறது.

இந்திய சட்டங்கள் மற்றும் விதிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளை இந்த புதிய கொள்கை மீறியிருப்பதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏராளமான இந்தியா்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனா். எனவே, மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் பிரச்னைக்குரியது மட்டுமின்றி, இந்திய பயன்பாட்டாளா்கள் மீது நியாயமற்ற நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

எனவே, தனியுரிமை கொள்கையில் கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றங்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும். இதுதொடா்பாக 7 நாள்களுக்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும். திருப்திகரமான பதில் கிடைக்கப்பெறவில்லை எனில், இதுதொடா்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே