நோன்பு நோற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன??

ஆன்மிக ரீதியிலாக முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தில் இருக்கும் நோன்பினால், மன உறுதி அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.

ரமலான் நோன்பிருப்பதால் உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை மறுக்கவே முடியாது.

முறையாக கடைப்பிடிக்கப்படும் நோன்பினால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதோடு, மன நலம் மற்றும் மன உறுதி அதிகரிக்கிறது.

அதே சமயம், அதிகப்படியான வெப்பம் மற்றும் கரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் சில கட்டுப்பாடுகளுக்கு இடையே தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்கத் தவறினால் நெஞ்செரிச்சல், ஜீரணக் கோளாறு, உடலில் நீர்சத்து குறைவது, கவனச் சிதறல், உடல் எடை குறைவது அல்லது கூடுவது போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே, ரமலான் நோன்பின் போது சில முன்னெச்சரிக்கைகளை எடுத்து உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

மாலை நேரத்தில் ரமலான் நோன்பை முடிக்கும் போது எடுக்கும் இஃப்தார் உணவை ஆரோக்கிய உணவாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

பேரீச்சம் பழம், சூப், காய்கறிகள் கலந்த சாலட் போன்றவற்றை உண்ட பிறகு முக்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம்.

நீண்ட நேரம் நோன்பிருந்துவிட்டு, இனிப்பு, சத்தில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை தவிர்த்துவிடுவது நல்லது.

ஒன்றிரண்டு பேரீச்சம் பழங்களுடன் உணவைத் தொடங்குவது நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

முக்கிய உணவும் புரதம் உள்ளிட்ட முக்கியச் சத்துக்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்றும் நிறைய பழங்கள், காய்கறிகள் கொண்டதாக இருப்பது நல்லது என்றும் கூறுகிறார்கள்.

சஹர்.. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு நோன்பை தொடங்குவதற்கு முன்பு எடுத்துக் கொள்ளும் உணவு மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

ஒரு போதும் சஹர் உணவை தவிர்க்கக் கூடாது.

இதில் ஒரு நாளைக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியிருக்க வேண்டும். நிச்சயம் ஆரோக்கியமான உணவாக இது அமைவதும் அவசியம்.

அதாவது, சஹர் உணவானது அதிகம் கார்போஹைட்ரேட் நிறைந்ததாகவும், இஃப்தார் உணவானது அதிகம் பழங்கள், காய்கறிகள் நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்வது சிறப்பு.

அதே சமயம், இறைச்சி, முட்டை, பால் பொருட்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பேரீச்சம் பழம், உலர்ந்த பழங்கள், உலர்ந்த தானியங்களை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.

அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்றிருப்பதும், அளவுக்கு அதினமான உணவை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதும் நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே