சத்தமில்லாமல் அஜித் செய்த காரியம்: பிற முன்னணி நடிகர்களும் செய்வார்களா?

கொரோனா வைரஸ் பிரச்சனையை மனதில் வைத்து வலிமை படத்திற்கான தன் சம்பளத்தை அஜித் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் மார்ச் மாதத்தில் இருந்து சினிமா துறை முடங்கிப் போயுள்ளது. கோடை காலத்தில் படப்பிடிப்பை விறுவிறுப்பாய் நடத்தி முடிக்க அவுட்டோரில் செட் போட்ட தயாரிப்பாளர்கள் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவதற்கு பதில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தியேட்டர்களை தற்போதைக்கு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தான் எங்களுக்கு பிழைப்பு நடக்கும் என்று இயக்குநர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

2021ம் ஆண்டில் தான் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. புதுப்படங்களில் பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர்களின் பரிதாப நிலையை புரிந்து கொண்டு சில நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் வலிமை படத்திற்கான தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அஜித் தயாரிப்பளர் போனி கபூருக்கு இமெயில் அனுப்பியிருக்கிறாராம்.

கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் தானாக முன்வந்து செய்துள்ள இந்த காரியம் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது. வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதன் பிறகு சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
வலிமை படத்தில் பைக், கார் ரேஸ் காட்சிகள் உள்ளது. அந்த காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருந்தார் இயக்குநர் ஹெச். வினோத். ஆனால் கொரோனா பிரச்சனை தற்போதைக்கு தீர்வதாக இல்லை என்பதால் வெளிநாட்டு ஷெட்யூலை அவர் கைவிட்டுவிட்டாராம்.

வலிமை படம் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை முடியும் வரை அப்டேட் எதுவும் கிடையாது என்று போனி கபூர் ஏற்கனவே கூறிவிட்டார். இருப்பினும் அப்டேட்டை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். வலிமை படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதவர்களிடம் எல்லாம் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தல ரசிகர்களின் இந்த நிலையை பார்த்து பலரும் பாவப்படுகிறார்கள்.

இதற்கிடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் தளபதி 65 படத்திற்கான சம்பளத்தில் ரூ. 20 கோடியை விஜய் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தளபதி 65 படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ விஜய்யை தன் சம்பளத்தை மேலும் குறைக்குமாறு தெரிவித்துள்ளதாம். தளபதி 65 படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்ட சன் பிக்சர்ஸ் விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசியது.
தற்போதுள்ள சூழலை கணக்கில் கொண்டு தளபதி 65 படத்தின் பட்ஜெட்டை குறைத்துவிட்டதாம் சன் பிக்சர்ஸ். அஜித், விஜய் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிக சம்பளம் வாங்கும் பிற முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களின் சுமையை குறைப்பார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே