இந்திய மருந்தியல் துறையால் உலகிற்கே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வழங்க முடியும் – பில் கேட்ஸ்

இந்தியாவால் உலகுக்கே கோவிட்-19 தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும் என்று மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ஆவணப்படமான `Covid-19: India’s War Against The Virus’ குறித்து பேசும்போது,“ இந்தியா, ஆரோக்கியம் தொடர்பான இன்னல்களை சந்திப்பதற்கு அதன் மிகப்பெரிய அளவும், அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களும்தான் காரணம்’’ என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மருத்துவ தொழிற்சாலை திறன் பற்றி கேட்ஸ் கூறுகையில்,“உலகத்துக்கே மருந்து மற்றும் தடுப்பூசி வழங்கிவரும் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவுக்கு அத்துறையில் தனி பலம் உண்டு.

உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில்தான் நடக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் மருந்து தயாரிப்பதற்கான உலக அளவிலான oalition for Epidemic Preparedness Innovations (CEPI) என்ற குழுமத்தில் இந்தியாவும் ஓர் உறுப்பினர்.

இந்தியாவின் மருத்துவ தொழிற்சாலையால் இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்க முடியும் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவில் பெரிய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூடில் தொடங்கி பயோ இ, பாரத் பயோடெக் என நிறைய நிறுவனங்கள் உள்ளன.

அந்நிறுவனங்கள் அனைத்தும் மற்ற நோய்களுக்கு போலவே கொரோனாவுக்கும் தடுப்பூசி கண்டறிய தங்களது முழு கொள்திறனை பயன்படுத்தி செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியா இன்னும் தொற்றின் முதல் கட்டத்தில்தான் உள்ளது. ஆனாலும் ஊரடங்கின் சில முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் முன் வந்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் ஏழைகள் பாதிக்காமல் காத்து வருகின்றனர்.

கடந்த 10 வருடங்களாகப் புதிய தடுப்பூசிகள் தயாரிப்பில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் எங்கள் அறக்கட்டளை தற்போதும் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது .

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் சிறந்த மருத்துவ வேலைகளை செய்து வருகிறது. எங்கள் அறக்கட்டளை, தற்போது இந்திய அரசுடன் சேர்ந்து இளையதளத்தில் அடிப்படை சுகாதார தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது” என்றார்.

பில்கேட்ஸின், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் நலிந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே