“தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது” – மமதா பானர்ஜி

‘மேற்குவங்க தலைமைச் செயலரை டில்லிக்கு அழைக்கும் உத்தரவு ஒருதலைபட்சமானது. அதை ஏற்க முடியாது’ என, பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசின் உத்தரவை ஏற்காமல் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக அடம் பிடிக்கும் மம்தாவின் போக்கு விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

‘யாஸ்’ புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது மேற்குவங்க முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்குபெறும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த மம்தா கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தார். அவருடன் அரசு அதிகாரிகளும் தாமதமாக வந்தனர். பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்காக அரைமணி நேரம் காத்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து மேற்குவங்க மாநில தலைமைச் செயலர் அலபன் பண்டாபாத்யாயாவை திரும்பபெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைமைச் செயலரை உடனடியாக பணியாளர் பயற்சி துறைக்கு மே 31ம் தேதிக்குள் (இன்று) அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மம்தா, இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்குவங்கம் கோவிட்டுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மேற்குவங்க தலைமைச் செயலரை டில்லிக்கு அழைக்கும் செயல் ஏற்க முடியாதது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் திடீர் மாற்றம் ஏன். இது ஒருதலைபட்சமானது. எனவே இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே