சிவன் மீதான தன் காதலின் தீவிரத்தைத் தன் தந்தைக்கு உணர்த்தத் தன்னையே தீயிலிட்டுச் சாம்பலாக்கிக் கொண்ட தாட்சாயணி, சதி வழக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறார்.

பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் மிகக் கொடூரமானது சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். மன்னராட்சி காலம் முதலே கைம்பெண்கள் சமூகத்துக்குச் சுமையாகக் கருதப்பட்டுவந்தனர்.

பதி பக்தியை நிரூபிக்கவும் கணவன் மீதான காதலின் வெளிப்பாடாகவும், கணவன் இறந்த பிறகு கணவனின் சிதையில் தாங்களும் வீழ்ந்து உயிர் துறப்பது அக்காலத்தில் பெண்களின் வழக்கமாக இருந்தது.

தொடக்கத்தில் சுயதேர்வின் அடிப்படையில் உயிர் துறந்த பெண்கள் பிறகு ‘சதி’ என்னும் சடங்கின் பெயரால் வலுக்கட்டாயமாகச் சிதையில் தள்ளிக் கொல்லப்பட்டனர்.

பொ.ஆ. (கி.பி.) 300 – 500களுக்குள் இந்த வழக்கம் தொடங்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அக்பர், ஔரங்கசீப் இருவரும் ‘சதி’ வழக்கத்தை ஒழிக்க முயன்றனர். ஆனால், அது கைகூடவில்லை.

இந்தியாவில், குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே ‘சதி’ நடைமுறையில் இருந்தது. பெண் எப்போதும் தன் தூய்மையையும் புனிதத்தையும் நிரூபிக்க வேண்டியவள் என்பதன் வெளிப்பாடாகத்தான் ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதைக் குறிக்கும் ‘சதி’ என்னும் சொல்லால் இந்த வழக்கம் அழைக்கப்பட்டது.

வீரத்தின் அடையாளமாக நடுகற்கள் நடப்பட்டதைப் போல், சதி வழக்கத்தின் அடையாளமாக ‘சதி கற்கள்’ அமைக்கப்பட்டன. மேல் நோக்கி அபயக்குரல் எழுப்புவதைப் போன்று தோற்றமளிக்கும் கை, ‘சதி பீட’த்தில் இடம்பெற்றிருக்கும்.

சிவன் மீதான தன் காதலின் தீவிரத்தைத் தன் தந்தைக்கு உணர்த்தத் தன்னையே தீயிலிட்டுச் சாம்பலாக்கிக் கொண்ட தாட்சாயணி, சதி வழக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறார்.

அதனாலேயே ‘சதி’யால் கொல்லப்படும் பெண்கள் ‘சதி மாதா’வாகவும் ‘சதி தேவி’யாகவும் வணங்கப்பட்டனர். அவர்கள் நினைவாகச் சிறுகோயில் எழுப்பப்படுவதும் உண்டு. கௌரவத்தின் பெயரால் கொல்லப்படும் பெண்களுக்குத் தெய்வ அடையாளம் கொடுக்கும் வழக்கத்தின் தொடர்ச்சிதான் இது.

பிரிட்டிஷ் இந்தியாவில் சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் பரவலான காலத்தில் ராஜா ராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் ‘சதி’ கொடுமைக்கு எதிராகவும் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் குரல்கொடுத்தனர்.

அதன் விளைவாக சதி ஒழிப்புச் சட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் முன்னெடுப்பால் வங்க மாகாண அரசால் 1829 இல் அமல்படுத்தப்பட்டது.

அதன் பிறகும் சதி வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டதால், சதிச் சடங்கை நடத்துபவர் தூக்கிலிடப்படுவார் என்று சார்லஸ் நேப்பியர் 1850இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு சதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்கள் ஓரளவுக்குக் கல்வியும் பொருளாதர வளர்ச்சியும் பெற்றுவந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தியோரலா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது ரூப் கன்வர் 1987இல் ‘சதி’ வழக்கத்துக்குப் பலிகொடுக்கப்பட்டார்.

திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் ரூப் கன்வரின் கணவர் இறந்துவிட, கணவரது சிதையில் ரூப் கன்வர் எரிக்கப்பட்டது இந்தியாவையே உலுக்கியது.

ரூப் கன்வர் தன்னிச்சையாகத்தான் சிதையில் இறங்கினார் என்றும் வலுக்கட்டாயமாகத் தீயில் தள்ளப்பட்டார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்பட்டன.

முன்னேற்றப் பாதையில் நாடு சென்றுகொண்டிருந்த நிலையில் மூட நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடூரம், மக்கள் மனங்களில் குடியிருக்கும் அறியாமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் பறைசாற்றியது.

ரூப் கன்வரின் மரணத்துக்குப் பிறகு சதி தடுப்புச் சட்டம் 1987இல் இயற்றப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே