வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..!!

வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 900 கனஅடி தண்ணீரை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியைச் சேர்ந்த இருபோக பாசனப்பகுதியில் உள்ள முதல்போக பாசனத்தை சேர்ந்த 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஜூன் 4 -ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு தொடர்ச்சியாக 900 கனஅடி தண்ணீரும். அதன் பிறகு முறை வைத்து 900 கனஅடி தண்ணீர் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

இநிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி, மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலெட்சுமி மற்றும் எம்எல்ஏக்கள் நா.ராமகிருஷ்ணன், ஏ.மகாராஜன், கோ.தளபதி, கே.எஸ்.சரவணக்குமார், வெங்கடேசன், மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமைப்பொறியாளர் எம்.கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே