மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகள் தொடர்பாக நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 9,173 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 31,500 ரூபாயை அவர் வழங்குகிறார்.
குறிப்பாக ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். 9,173 நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதன் அடையாளமாக அறிவுத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கும் 1,500 ரூபாய் வீதம் 21,000 ரூபாயை இன்றைய தினம் முதலமைச்சர் தலைமை செயலகத்தில் வழங்கியுள்ளார். அதேபோல மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் சார்பில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் நேரடியாக பயனாளிகளுக்கு இந்த திட்டத்தை வழங்கியுள்ளார்.
இதேபோல மற்ற மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த திட்டமானது தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள ஆட்சியர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் மூன்று நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும், ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.