3 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைக்கும் போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருகிறது : நடிகர் சிம்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைக்கும் போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வருவதாக நடிகர் சிம்பு வேதனை தெரிவித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படம் சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது.

கடந்த புதன்கிழமை படப்பிடிப்பு நடந்தபோது ராட்சத கிரேன்  சரிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் மது, இந்திரன் மற்றும் உதவி இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறந்தவர்களோடு அவர்களது குடும்பத்தின் கனவுகளும் தொலைந்து போய் விட்டதை நினைக்கும் போது கண்ணீர் வருவதாக வேதனை தெரிவித்துள்ள சிம்பு, இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு நிகழாதவாறு கவனமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சிம்பு.

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்யாது என்பதால், அனைவரும் பாதுகாப்பை உறுதிசெய்து பணி செய்யுமாறு சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே