அனைத்து வாக்காளர்களுக்கும் போட்டோ இல்லாத தகவல் சீட்டு வழங்கப்படும்..!!

வழக்கமாக வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு கொண்டுச் செல்லும் வாக்காளர் சீட்டில் புகைப்படம் இருக்கும்.

இம்முறை வழங்கப்படும் வாக்காளர் சீட்டில் வாக்காளர் புகைப்படம் இருக்காது, தகவல் சீட்டாக மட்டுமே அளிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்காளர்களை கண்டறிய, போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்கள், விலாசம் மாறியவர்கள், வாக்காளர்கள் விவரம் உள்ளிட்டவற்றை அறிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதில் தற்போது புகைப்படத்துடன் கூடிய பட்டியலாக வருகிறது.

சில தேர்தலுக்கு முன்னர் வரை கட்சிகள் வாக்காளர்களுக்கு ரசிதை தங்கள் கட்சி சின்னம் போட்டு வழங்கி வந்தார்கள். 

இதை தடை செய்த தேர்தல் ஆணையம் தங்கள் அலுவலர்கள் மூலம் ஆணையமே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை (Photo Voter Slip) வழங்குவோம் என அறிவித்து வழங்கி வருகிறது.

இதனால் வாக்காளர்கள் பற்றி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடியில் எளிதாக அடையாளம் காண பட்டியலுடன் ஒப்பிட முடிந்தது.

இம்முறை 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தோருக்கு தபால் வாக்கு உள்ளிட்ட பல திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று புது அறிவிப்பு ஒன்றை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பு வருமாறு:

‘நடைபெறவிருக்கின்ற சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல், 2021-இற்கான வாக்காளர் தகவல் சீட்டினை (Voter Information Slip) புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் (Photo Voter Slip) பதிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது.

வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டினையும் விநியோகிக்க அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’.

இவ்வாறு சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே