நம்பர் 6, 7ம் நிலைகளில் அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியாவினால் சரிவர ஆட முடியவில்லை, மேலும் இங்கிலாந்துக்கு எதிராக பினிஷர் பங்காற்றுகிறார், இது அவருக்கு சரிவராது என்கிறார் அஜய் ஜடேஜா.
பின் வரிசையில் களமிறக்கி ஹர்திக் பாண்டியாவின் திறமையை கோலி வீணடிக்கிறார் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா சாடியுள்ளார்.
நம்பர் 6, 7ம் நிலைகளில் அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியாவினால் சரிவர ஆட முடியவில்லை, மேலும் இங்கிலாந்துக்கு எதிராக பினிஷர் பங்காற்றுகிறார், இது அவருக்கு சரிவராது என்கிறார் அஜய் ஜடேஜா.
ஒரு நிலையான அணியை உருவாக்கி வாய்ப்பளித்து ஆடாமல் போட்டிக்கு போட்டி மாற்றிக் கொண்டேயிருக்கிறார் கோலி, இதனால் அணி செட்டில் ஆகவில்லை என்ற குற்றச்சாட்டை கோலி எதிர்கொண்டு வருகிறார்.
பவுலிங் சொத்தையாக உள்ளது, ஏன் சிராஜை சேர்க்கவில்லை, சைனியை சேர்க்கவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன. குழிபிட்ச் போட்டால் சரி ஸ்பின்னர்கள் அதிகம் இருக்கலாம், இது நல்ல பிட்ச்தானே சிராஜ், சைனியை இறக்க வேண்டியதுதானே?
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கூறும்போது, “சில வீரர்கள் அவர்களுக்கு உரிய இடத்தில் களமிறக்கப்படுவதில்லை என்று நான் உணர்கிறேன். நான் ஹர்திக் பாண்டியாவின் ரசிகன். அவர் பேட் செய்ய வரும்போது யாருக்கு ஓவர்கள் மீதமிருக்கின்றன பாருங்கள், மார்க் உட், ஆர்ச்சர்.
இப்படியல்லாமல் மிடில் ஓவர்களில் சாம் கரன், ஜோர்டான் ஆகியோரை ஹர்திக் பாண்டியா ஆடினால் நமக்கு சாதகமாக அமையும். அப்படி அடித்து வைத்துக் கொண்டால் கடினமான மார்க் உட், ஆர்ச்சர் வரும்போது ரன்கள் குறைவாக வந்தாலும் பரவாயில்லை.
நிச்சயம் எந்த அணியிலும் ஒரு பலவீனமான பௌலர் அல்லது ரன்கள் கொடுக்கும் பவுலர் இருக்கவே செய்வார், அவரை இலக்கு வைத்து டவுன் ஆர்டர் முடிவெடுக்கப்பட வேண்டும்.
ஹர்திக் பாண்டியாவுக்கு பந்துகள் மட்டையில் சிக்க ஆரம்பித்தால் என்ன வேகத்தில் எடுப்பார் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். எனவே அடிக்கும் ஒரு வீரரை மார்க் உட், ஆர்ச்சரை சந்திக்க விடாமல், ஜோர்டான், சாம் கரண் வீசும் போது சந்திக்கவிட்டால் பயன் கிடைக்கும்.
இந்தியாவின் தற்போதைய பேட்டிங் வரிசை அதனால்தான் சரியாக இறக்கப்படுவதில்லை என்கிறேன் நான்” என்றார்.
நம் கேள்வி என்னவெனில் ஹர்திக் பாண்டியாவை மட்டுமா கோலி வீணடிக்கிறார்? வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன், ரோகித் சர்மா உள்ளிட்டோரையும் தான்.