‘சீயான் 60’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ஹா ஒப்பந்தம்

சீயான் 60′ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 10-ம் தேதி தொடங்கப்பட்டது. விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள்.

இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை இன்று (மார்ச் 12) படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் ‘மெர்க்குரி’ மற்றும் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்கள் தவிர்த்து மீதி அனைத்திலும் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார். செப்டம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிடும் முனைப்பில் இருக்கிறது படக்குழு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே