பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி! காரணம் இதுதான்.

விஜய் சேதுபதி தெலுங்கில் நடிக்கவிருந்த புஷ்பா படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் கொடூர வில்லனாக தான் இருக்கும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தன் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். ஒரே நேரத்தில் அவர் பல படங்களில் நடிப்பார் என்பதால், அவர் டஜன் கணக்கில் கைவசம் படங்கள் வைத்திருப்பது வழக்கமான ஒன்று தான்.

விஜய் சேதுபதி கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிப்பதாக தகவல் பரவி இருந்த நிலையில் அதை அவர் சமீபத்தில் மறுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட தெலுங்கு படமொன்றிலும் நடிக்காமல் வெளியேறி விட்டதாக விஜய் சேதுபதி பேட்டியளித்துள்ளார்.

மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புஷ்பா படத்தில் இருந்து தான் விஜய் சேதுபதி வெளியேறியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. பாகுபலி, கே ஜி எஃப் போன்ற படங்கள் இந்திய அளவில் பேசப்பட்ட நிலையில் அதுபோல இந்த படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஷ்மிகா இதில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

தற்போது கைவசம் அதிக எண்ணிக்கையிலான படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சினை காரணமாகத்தான் புஷ்பா படத்தில் இருந்து வெளியேறி விட்டார் என தெரிகிறது. விஜய் சேதுபதிக்கு பதிலாக யாராவது ஒரு முன்னணி நடிகரை தேர்வு செய்ய புஷ்பா படக்குழு முயற்சித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியை வில்லனாக நடிக்க வைக்க புஷ்பா படக்குழு யோசித்து வருகிறது என சில வாரங்களுக்கு தகவல் வெளியானது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ள புஷ்பா படம் ஆந்திர காட்டுப்பகுதிகளில் அதிகம் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றிய கதை என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில் அல்லு அர்ஜுன் போலீஸ் முன் செம்மரக் கட்டைகளுக்கு அருகில் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. அதனால் அவரும் செம்மர கடத்தல் கும்பலில் ஒருவராக நடிக்கிறார் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி இதற்கு முன்பு சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அவரை பல முன்னணி இயக்குனர்கள் அணுகினார்கள். அவர் உப்பேனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்தப் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விரைவில் தமிழிலும் ரீமேக் செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சூழ்நிலையில் அவர் புஷ்பா படத்தில் இருந்து வெளியேறுவது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவி இருந்தது. அந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஆர்.பார்த்திபன் நடித்துள்ளார்
அதில் விஜய்சேதுபதி அரசியல்வாதியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே