விஜய் ஹசாரே கோப்பை : 4-வது முறையாக மும்பை அணி சாம்பியன் : பிரித்வி ஷா அதிரடி, தாரே சதம்

கேப்டன் பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம், ஆதித்யா தாரேவின் அபாரமான சதம் ஆகியவற்றால், டெல்லியில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் உத்தரப்பிரதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்தது. 313 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 41.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மும்பை அணித் தரப்பில் ஆபாரமாக ஆடி சதம் அடித்து 108 ரன்களுடன்(18பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதித்யா தாரே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதிரடியாக ஆடிய கேப்டன் பிரித்வி ஷா 39 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் பிரித்வி ஷா மொத்தம் 827 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு தொடரில் அதிகபட்சமான ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் பெருமையையும் பிரித்வி ஷா பெற்றார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய பிரித்வி ஷா, யாஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பிரித்வி ஷா 73 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாம்ஸ் முலானி(36) ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய துபே 28 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

உத்தரப்பிரதேச அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் மாதவ் கவுசிக் 158 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரின் போராட்டமும், சதமும் கடைசியில் வீணானது. உத்தரப்பிரதேச அணியில் சமர்நாத் சிங்(55), அக்ஸதீப் நாத்(55) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே