பா.ஜ.கவில் இணைகிறாரா..? டெல்லி சென்ற குஷ்பு…!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரின் இந்தப் பயணம் பாஜகவில் இணைவதற்காகவே என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளார் என்று சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், குஷ்பு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் குஷ்பு இணையவுள்ளார் என்று மீண்டும் செய்திகள் வெளியாகின. அந்தத் தருணத்தில் டெல்லிக்குச் சென்றார் குஷ்பு.

அங்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போதுகூட “2 ரூபாய்க்கு ட்வீட் போடுபவர்களின் கருத்துகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என்று கடுமையாகச் சாடினார்.

இதனிடையே, இன்று (அக்டோபர் 11) மாலை முதலே “நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைகிறார்” என்று தகவல்கள் பரவின.

ஆனால், குஷ்பு வீட்டிலேயே இருந்ததால் இந்தத் தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டார்கள்.

இதனிடையே இன்று மாலை கணவர் சுந்தர்.சியுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் குஷ்பு.

அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

‘பாஜகவில் இணையத்தான் டெல்லி செல்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்தார் குஷ்பு.

‘பின்பு எதற்காக டெல்லி செல்கிறீர்கள், பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறதே’ என்ற கேள்விக்குக் கூட ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்தார்.

அப்போது, ‘காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு குஷ்பு, ‘நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவதற்காகவே குஷ்பு டெல்லி புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நாளை அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்பு பாஜகவில் இணைவதற்காக தமிழக பாஜக‌ தலைவர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவிக்காத எல்.முருகன், ‘குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்’ என பதிலளித்தார்.

பாஜகவில் இணையப் போகிறார் குஷ்பு என்ற வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு, பாஜக கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், “வெல்கம் குஷ்பு” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே