ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு..!!

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தின் உச்சக்கட்டமாக 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணி நடத்தினர்.

பேரணி கலவரமாக மாறியதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது. உரிய சுற்றுச்சூழல் விதிமுறைகளைப் பின்பற்றி ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா உயர் நீதிமன்றத்தை நாடியது.

ஆனால் வேதாந்தாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சூழலில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார், முதலமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில் துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் உட்புறம் தினமும் 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகு (Unit) இருப்பதாகவும், தற்போது பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அந்த அலகை மட்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிபிடப்பட்டிருந்தது.

இதே கடிதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இச்சூழலில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே