பட்டியலின பெண்கள் காலில் விழுந்த வானதி சீனிவாசன்..!!

பட்டியலின பெண்கள் காலில், அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்து ஆசி பெற்றுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்!

பாஜக மகளிரணி மாநில தலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார்..

இந்த பொறுப்பு ஏற்ற பிறகு, பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் உட்பட பல்வேறு ஆன்மீக பெரியவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

அதேபோல, தன்னுடைய சொந்த கிராமமான உப்பிலிபாளையத்திற்கும் வானதி சென்றிருந்தார்.. அங்கு பட்டியலின மக்களின் கோவிலில் சாமி கும்பிட்டார்..

பிறகு அங்கிருந்த பட்டியலின பெண்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்…

இதனை தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு ஸ்வீட்டுகளையும் வழங்கி தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

வானதியின் இந்த செயல், பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகிறது..

காரணம், பட்டியலின மக்களுக்கு எதிராக திமுக இருப்பதாக பாஜக தொடர்ந்து அக்கட்சியை குற்றஞ்சாட்டி வருகிறது..

குறிப்பாக, எம்பி தயாநிதி மாறன், அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, “நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?” என்று பேசி சர்ச்சையில் சிக்கியபோது, விவகாரத்தை பெரிதாக்கியது பாஜகதான்.

அதேபோல, ஆர்.எஸ்.பாரதி ஒரு கூட்டத்தில், திராவிட இயக்கத்தின் சாதனைகள் பற்றி பேசும்போது, “ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்ற பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று கூறிய போதும் அதை வெளிப்படையாகவே விமர்சித்ததும் பாஜகதான்.

அதுமட்டுமல்ல, சிதம்பரம் அருகே ஊராட்சிமன்ற தலைவியாக இருந்த ராஜேஸ்வரியை, திமுக நிர்வாகி தரையில் உட்கார வைத்ததற்குகூட, “இதுதானா திமுகவின் சமூக நீதியா? இதுதான் சாதியை ஒழித்த லட்சணமா?” என்று கேள்வி எழுப்பிய பாஜக, தற்போது வரை தன்னை பட்டியலின மக்களுக்கு ஆதரவான கட்சியாக வெளிப்படுத்தி கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கதாகவே உள்ளது..!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே