போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது.

இப்படத்தினை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். ‘நேர்கொண்ட பார்வை’-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ‘வலிமை’ படத்தில் இணைந்தது. பல தடைகளை தாண்டி, குறிப்பாக கொரோனா எனும் பேரிடரை தாண்டி, வலிமை கடந்த மாதம் 24 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியது. படம் வெளியாகி ஒருமாதம் ஆகவுள்ள நிலையில், தற்போது படம்குறித்த புது அப்டேட்டொன்று கிடைத்துள்ளது.

படம் பெரிதும் தள்ளிப்போன நிலையில், ‘எங்களை சுற்றி எல்லாமே சரியாக நிகழ்ந்த போது, கோவிட் 19 எங்கள் நாள்களை கடினமாக்கியது. மீண்டும் வாழ்வதற்கு, மீண்டும் அன்பு செலுத்துவதற்கு, மீண்டும் எங்களுக்கு பிடித்தமான விஷயத்தை (படப்பிடிப்பை மீண்டும் தொடங்க) செய்வதற்கு, எங்களுக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்ற ஒரு சிறு நம்பிக்கைக்கான ஒளிக்காக, எல்லோருடனும் சேர்ந்து நாங்களும் காத்திருந்தோம்.

கடினமான அந்த நேரங்களிலும், மக்கள் தங்களின் அன்பை எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்! அந்த அன்பு, எங்களுக்கு வலிமையை, நம்பிக்கையை, மனஉறுதியை கொடுத்தது. அவற்றின் பலனாய், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினோம்!’ போன்ற விஷயங்கள் கூறப்பட்டது. பலகட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கும் காத்திருக்கும் பின்னர் வெளியான வலிமை, 25-வது நாளின் முடிவில் 224.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியனது.

இந்நிலையில் தற்போது வலிமை பற்றிய அடுத்த அப்டேட் வந்துள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தகட்டமாக தியேட்டர்களை தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக வெளிவந்திருக்கும் அறிவிப்பின்படி, `வலிமை திரைப்படம், மார்ச் 25ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும்’ என ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் பிரபலமாகி வந்தாலும்கூட, இன்னும் ஜீ நிறுவனம் தனது சமூகவலைதளங்களில் இதை உறுதிசெய்யவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் சொல்கிறோம் என்றே பதிவிட்டு வருகின்றனர். படம் எப்படி பல்வேறு மொழிகளில் வெளியானதோ, அதேபோல ஓடிடியிலும் அனைத்து மொழியிலும் படத்தை பார்க்கலாம் என்று மட்டும் ஜீ தெரிவித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே