அமெரிக்க அதிபர் தேர்தலில் டெக்சாஸ், புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.
உலகின் சக்திவாய்ந்த பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. முன்கூட்டியே 10 கோடி பேர் வாக்களித்த நிலையில், தேர்தல் நாளில் மேலும் 6 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
வாக்குப்பதிவு முடிந்த மாகாணங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதனால், அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்பா, பிடெனா என்பது பற்றி எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், முக்கிய மாகாணங்களான டெக்சாஸ் மற்றும் புளோரிடாவை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கைப்பற்றியுள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 38 தேர்வு வாக்குகளையும், புளோரிடா மாகாணத்தில் உள்ள 29 தேர்வு வாக்குகளையும் கைப்பற்றினார். டெக்சாஸ் மாகாணத்தில் டிரம்ப் 53,43,418 வாக்குகளும், ஜோ பைடன் 47,83,224 வாக்குகளையும் பெற்றனர்.
புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் 56,38,656 வாக்குகளும், ஜோ பைடன் 52,57,698 வாக்குகளையும் பெற்றனர். டிரம்பின் சொந்த மாகாணம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 227 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 204 இடங்கள் பெற்றுள்ளார்.
மொத்தமுள்ள 538 இடங்களில் பெருன்பான்மைக்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும் தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபராக யார் முடிசூட போகிறார் என்பது இன்று மதியம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.