இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயல்பட வேண்டும், சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலான கருத்துக்களைப் பரப்ப அனுமதித்தால், சமூக ஊடக நிறுவனங்கள் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய தகவல் தொழிலநுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

டெல்லி செங்கோட்டை வன்முறை தொடர்பாகவும், வேளாண் சட்டங்கள், விவசாயிகள் போராட்டம் ஆகியவை குறித்து தவறான தவல்களையும், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பரப்பி வரும் 1,100 ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கோரியிருந்தது.

ஆனால், ட்விட்டர் நிறுவனம் அந்த கணக்குகளை முடக்காமல் இருந்தது. 

இதனால் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்தது.

இதையடுத்து ட்விட்டர் பிரதிநிதிகளை அழைத்த மத்திய அரசு இந்தியச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

இதில் பேச்சுவார்த்தைக்கு ஏதும் இடமில்லை என்று கண்டிப்புடன் தெரிவித்தது.

இந்நிலையில் ட்விட்டர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்கள் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும், தனிநபர்களுக்கான சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது.

அதேசமயம், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, இறையாண்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளும்.

தயவு செய்து விரோதத்தைப் பரப்புவதற்கோ, தவறானத் தகவல்களை பரப்புவதற்கோ சமூக ஊடகங்கள் அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவில் இந்திய அ ரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

ஊடகங்களுக்கான சுதந்திரத்தையும், தனிநபர்களுக்கான கருத்து சுதந்திரத்தை அரசு மதிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் போராட்டக்கார்கள் சென்றபோது, ட்விட்டர் நிறுவனம் எவ்வாறு பொறுப்புடன் செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

அதேபோன்று, டெல்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் நுழைந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இரட்டை நிலைப்பாடு இந்தியாவில் வேலை செய்யாது.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள், குறிப்பாக மோடி விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டுகிறார் எனும் ஹேஸ்டேக் போன்றவை தடுக்கப்பட வேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுக்கென தனியாக ஒழுங்கு கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும்.

அப்போதுதான் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகினால், தடுக்க முடியும். இதன் அர்த்தம் இந்திய சட்டங்களை பின்பற்றமாட்டார்கள் என்பதல்ல.

உங்கள் நல்லப் பணிகளை மதிக்கிறோம். நீங்கள் சுதந்திரமாக தொழில் செய்யலாம். அன்னிய முதலீட்டைக் கொண்டு வரலாம்.

அதேசமயம், இந்தியச் சட்டங்களை, விதிமுறைகளையும் மதிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் தனிப்பட்ட மனிதர்களின் அந்தரங்கங்களை பாதுகாப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. புதிய விதிகள் வந்தவுடன் இடைவெளி நிரப்பப்படும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே