வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை..; தலைமைத் தேர்தல் ஆணையர் எச்சரிக்கை..!!

வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வரும் எப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ் குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி பி.சரண், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று (பிப். 11) சென்னை வந்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அவர்கள், நேற்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து இன்று (பிப். 11) எஸ்.பி-க்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், சுனில் அரோரா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“அரசியல் கட்சி பிரதிநிதிகள், எஸ்.பி-க்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.

இன்று பல துறையை சேர்ந்த அதிகாரிகள், தமிழக அரசின் தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினோம்.

மே 24-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிகிறது. தேர்தல்களில் தமிழகத்தில் அதிகமான வாக்குகள் பதிவாகின்றன. இந்த தேர்தலில் இன்னும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என நம்புகிறோம். வரும்.

அமைதியான, நேர்மையான, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும். பெண்கள், முதியவர்கள் வாக்களிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

கரோனா காலத்தில் பீகார் தேர்தலை நடத்தியது மிகவும் சவாலாக இருந்தது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நடத்தவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தின.

பணப்பட்டுவாடாவை தடுக்கவும், தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

முதியோர்கள் தபால் வாக்குகளாக அல்லாமல் பழைய முறையில் வாக்களிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படும்.

மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.

வாக்குப்பதிவு நிறைவுற்ற பின், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா காரணமாக தமிழகத்தில் 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும். ஏற்கெனவே 68 ஆயிரத்து 324 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதனால், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பணப்பட்டுவாடா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் 24மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

உள்ளூர் திருவிழாக்கள், தமிழ் புத்தாண்டு, தேர்வுகள், வெயில் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே