சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு தாக்கல்

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடைய பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியிலும், தி.மு.கவினர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இருப்பினும், அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் இருந்தார். அதனையடுத்து, 2019-ம் ஆண்டு தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

அவர், இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதை வாரிசு அரசியல் என்று எதிர்கட்சியினர் தீவிரமாக விமர்சித்தனர். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எல்லாருக்கும் முன்னதாக அவர், டிசம்பர் மாதத்திலிருந்தே பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அவர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்தன.

இந்தநிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனுவை உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே