அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்..!!

குமரி அருகே நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி “மஹா” என்ற புயலாக மாறியுள்ளது.

அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டாவதாக ஏற்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை மைய தலைமை இயக்குனர் பாலச்சந்திரன், “மஹா” என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று தீவிர புயலாக மாறி லட்ச தீவு பகுதியில் நிலவும் என கூறினார்.

அரபிக்கடல் பகுதியில் ஏற்கனவே கியார் புயல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டாவது உருவாகியுள்ள இப்புயலால் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பாலசந்திரன் கூறினார்.

கேரளா குமரி கர்நாடகா கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என பாலசந்திரன் கேட்டுக்கொண்டார்.

சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் இன்று பிற்பகலுக்கு பிறகு மழை குறையும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

இந்நிலையில், கொசஸ்தலை ஆறு மற்றும் அடையாறு படுகைகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஆற்றுப் படுகைகளில் உள்ள அணைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளருக்கு மத்திய நீர்வள ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே