ஐதராபாத் ATM கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது..!!

ஆந்திரம் மாநிலம், ஹைதாரபாத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளிகளில் 2 பேரை திருவள்ளூர் அருகே வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும் போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் காவலர்கள் கைது செய்தனர்.

ஆந்திரம் மாநிலம் ஹைதாரபாத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏடிஎம் மையத்தில் மிக பெரிய அளவிலான கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

எனவே இந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை ஏற்கெனவே கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் செல்லிடப்பேசி எண் தெரிவித்துள்ளனர்.

அப்போது, அந்த செல்லிடப்பேசி எண்ணை வைத்து சோதனை மேற்கொண்டபோது, இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சண்முகப்பிரியா (காஞ்சிபுரம்), பி.அரவிந்தன்(திருவள்ளூர்) ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் செல்லிடப்பேசி எண் டவரை வைத்து அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அப்போது, ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்கள் லாரி ஒன்றில் சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது.

அதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து காவல் துறையினர் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் அருகே கைவண்டூர் கிராமத்தில் வாகனத்திற்கு பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், காஞ்சிபுரம் எஸ்பி. சண்முகப்பிரியா தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குறிப்பிட்ட லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த லாரியில் ராஜஸ்தான் மாநிலம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்த வாசிம்(30) மற்றும் ஹாசன்(35) ஆகிய 2 பேர் இருப்பது தெரியவந்தது.

அதில் குறிப்பிட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திராவில் ஏடிஎம் மையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இருவரையும் கடம்பத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஆந்திரம் மாநிலத்தில் நடைபெற்ற மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை திருவள்ளூரில் டீசல் நிரப்பும் போது காவலர்கள் கைது செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே