லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை – குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்..!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மீது குடிபோதையில் இருந்த நபர்கள் நேற்று நள்ளிரவு வாகனத்தை மோதச் செய்து கொலை செய்தனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளி விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு(56).

இவர் நேற்றிரவு ஏரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்ற முருகவேலை பிடித்து விசாரணை நடத்தி டாட்டா ஏசி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் தனது நண்பர்கள் சிலருடன் கூட்டாகச் சேர்ந்துகொண்டு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பாலுவை நள்ளிரவு நேரத்தில் மற்றொரு டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் பின்தொடர்ந்தனர்.

நள்ளிரவு 2:00 மணி அளவில் கொற்கை விலக்குப் பகுதியில் உதவி ஆய்வாளர் பாலு சென்று கொண்டிருந்த மோட்டார் பைக் மீது டாட்டா ஏசி வாகனத்தை மோதச் செய்து விபத்து ஏற்படுத்திக் கொலை செய்தனர்.

இச்சம்பவம் ஏரல் காவல் நிலைய போலீஸார் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இசை பாலு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி முருகவேல் காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக் குமார் முன் சரணடைந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே