’த்ரிஷ்யம்’ ரீமேக்; ஆசைப்பட்ட ரஜினி: சாத்தியமாகாதது ஏன்? – தயாரிப்பாளர் தாணு பகிர்வு

கபாலி’ திரைப்படத்துக்கு முன் ’த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க விரும்பியது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பகிர்ந்துள்ளார்.

2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் ’த்ரிஷ்யம்’. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது. சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே நடிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் ’கபாலி’. தாணு இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு முன் ’த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க ரஜினிகாந்த் விரும்பினார் என்று அண்மையில் ஒரு பேட்டியில் தாணு கூறியுள்ளார்.

“’கபாலி’ என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். 1985ஆம் ஆண்டு என் தயாரிப்பில் நடிப்பதாக ரஜினிகாந்த் வாக்கு கொடுத்தார். ’அண்ணாமலை’ எடுப்பதற்கு முன்பு மும்பைக்கு என்னை வரவழைத்துக் கதை கேட்டார். ஆனால், அந்தக் கதை அவருக்கும் சரி, பின்பு எனக்கும் சரி அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அதனால் அப்போது அது சாத்தியப்படவில்லை.

பின் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ’எஜமான்’ கதை கேட்ட பிறகு, அவரிடம் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று ஏவிஎம், என் பெயர் மற்றும் பஞ்சு அருணாச்சலம் ஆகிய பெயர்களைச் சொன்னார். முதல் பெயர் ஏவிஎம் என்பதால் ஆர்.வி.உதயகுமார் அதைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இதை ரஜினி என்னிடம் சொல்லவில்லை. பின்னாட்களில் உதயகுமார் என்னிடம் சொன்னார்.

’முத்து’ சமயத்தில் என் டைரியில் அவரே எழுதினார். யாருக்கு எவ்வளவு லாப விகிதம் என்பது வரை எழுதிவிட்டார். ஆனால், அன்று மாலை, பாலசந்தர் தயாரிப்பில் நடக்கும் ஒரு சூழல் வந்துவிட்டது. நான் சுவிட்சர்லாந்து செல்கிறேன். சென்று வந்த பிறகு நாம் பேசிக்கொள்ளலாம் என்றார்.

இன்னொரு முறை நான் கே.பாலசந்தருடன் நெருங்கிப் பழகிய சமயத்தில், அவரது சூழல் புரிந்து, ரஜினியிடம் சென்று நீங்கள் அவருக்காக இப்போது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றேன். அதுதான் ’குசேலன்’.

’கபாலி’க்கு முன் ’த்ரிஷ்யம்’ தமிழில் எடுக்கலாம் என்றார். ஆனால், அதன் தெலுங்குப் பதிப்பு வெளியாகியிருந்ததால் நமக்கு அந்தச் சந்தை வியாபாரம் பாதிக்கும். நம்மால் தெலுங்கில் படத்தை வெளியிட முடியாது, 25-30 கோடி ரூபாய் வருவாய் வராதே என்றேன். அவரும் சரி என்று புரிந்துகொண்டார். அதன் பிறகுதான் ’கபாலி’ நடந்தது” என்று தாணு பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே