திருச்சி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை

திருச்சி அதவத்தூரில் எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங்காதேவி(வயது 14).

இவர், எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், அந்த மாணவி நேற்று மதியம் 1 மணியளவில், வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு முள்காட்டில் கொட்டச் சென்றாள்.

அதன்பிறகு மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது குப்பை கொட்டச் சென்ற முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் நேற்று 3 தனிப்படைகள் அமைத்த நிலையில் இன்று 11 தனிப்படைகள் அமைக்க எஸ்.பி உத்தரவிட்டார். 

10க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை மேற்கொண்டது.

இதையடுத்து, மாணவியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், எரித்து கொல்லப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  சிறுமி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை 6 தொடர் பாலியல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பாலியல் தாக்குதல் தொடர்பாக 6வது முறையாக தாமாக முன்வந்து ஆணையம் விசாரணையை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே