“உ.பி அரசின் திட்டமிட்ட செயல்” : விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சந்தேகத்தை எழுப்பும் அகிலேஷ் யாதவ்!

பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் பிக்ரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விகாஸ் துபே. இவர் மீது பல்வேறு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் விகாஸ் துபேவைக் கைது செய்ய கடந்த 2ம் தேதி போலிஸார் பிக்ரு கிராமத்தைச் சுற்றி வலைத்தனர்.

அப்போது தனது கூட்டாளிகளுடன் இனைந்து பிடிக்க வந்த போலிஸாரை சரமாரியாக சூட ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலிஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது விகாஸ் துபே தப்பிச் சென்றான்.

விகாஸ் துபேவைப் பிடிக்க போலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலிஸார் விகாஸ் துபேவை கைது செய்தனர். இதனையடுத்து உத்தர பிரதேச போலிஸாரிடம் விகாஸ் துபே மத்திய பிரதேச போலிஸார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து உத்திர பிரதேசம் நோக்கி, தூபே கார் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அதிகாலை 7 மணியளவில் தூபே அழைத்துச் செல்லப்பட்ட கார், மழையால் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

அப்போது போலிஸாரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, தூபே தங்களை நோக்கி சுட்டதாகவும், தப்பிக்க விடாமல் தடுக்க அவர் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

காயமடைந்த விகாஸ் தூபே இறந்ததாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திய நிலையில், விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல் என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “விகாஸ் துபே அழைத்துவரப்பட்ட கார் கவிழவில்லை; அது கவிழ்க்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச அரசு தனது ரகசியத்தை வெளிவராமல் பார்த்துக்கொள்வதற்கு காரை கவிழ்த்துள்ளனர்.

விகாஸ் துபே என்கவுண்டர் சம்பவம் திட்டமிட்ட செயல்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 394 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே