சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் காவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.
முருகன் தரப்பில், தந்தை, மகன் கொலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் தயார் செய்த புகாரில் கையெழுத்திட்டதை தவிர வேறு எந்த தவறும் செய்யவில்லை என்றும், தாமஸ் பிரான்சிஸ் தரப்பில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிகிறேன்.
தந்தை, மகன் இறப்புக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், முத்துராஜ் தரப்பில், புகாரில் சாட்சியாக கையெழுத்திட்டதைத் தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டது.
சிபிஐ தரப்பில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஜூன் 19-ல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 22, 23-ல் அடுத்தடுத்து இரவரும் உயிரிழந்துள்ளனர்.
பென்னிக்ஸ் கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவரது உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. ஜெயராஜ் உடலில் 17 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயராஜ் இறப்புக்கும் கடுமையான காயங்களே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை முதலில் விசாரித்த சிபிசிஐடி போலீஸார் 60பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிபிஐ தற்போது வரை 35 பேரிடம் விசாரித்துள்ளோம்.
விசாரணை அதிகாரிகள் சிலர் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் விசாரணை இன்னும் நிறைவடையவில்லை.
மனுதாரர்கள் 3 பேருக்கும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறப்பில் தொடர்புள்ளது.
எனவே 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
முருகன் உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்க ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பிலும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அனுமதி வழங்கி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.