இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் நிறைவு….

சென்செக்ஸ், தன் வர்த்தக நேர முடிவில் சுமாராக 3,934 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

கடந்த ஜனவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் தன் வாழ்நாள் உச்சப் புள்ளியான 42,273 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்று சுமாராக 16,290 புள்ளிகள் சரிந்து 25,981 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸ் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் சரிவது எல்லாம் இந்த சில வாரங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆனால் ஒவ்வொரு முறையும் சென்செக்ஸ் ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டே இருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

கடந்த மார்ச் 12, 2020 அன்று தான் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,919 புள்ளிகள் சரிந்து வரலாறு காணாத ஒரு நாள் வீழ்ச்சி என அதிர்ச்சி கொடுத்தது.

இன்று மீண்டும் சென்செக்ஸ், வரலாறு காணாத அளவுக்கு, ஒரே நாளில் 3,934 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வயிற்றில் தீ கொளுத்தி இருக்கிறது.

இப்படி தொடர்ந்து சரிந்து கொண்டே போனால், உலகின் பங்குச் சந்தைகள் மீதே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்.

சென்செக்ஸின் 30 பங்குகள் மிகக் குறைந்த அளவே சைவு கண்ட பங்கு என்றால் அது பவர் கிரிட் கார்ப்பரேஷன் மட்டுமே. இதுவே 2.2 % விலை சரிந்து இருக்கிறது.

ஆக்ஸிஸ் பேங்க் எல்லாம் ஒரே நாளில் சுமாராக 28 சதவிகிதம் சரிந்து எல்லோரையும் அதிர்ச்சியில் உறைய வைத்து இருக்கிறது.

30-க்கு 30 பங்குகளும் 2.2 – 28.01 % விலை சரிவில் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.

இன்று மார்ச் 23, 2020 வர்த்தகமாகத் தொடங்கி இருக்கும் லண்டனின் எஃப் டி எஸ் இ 3.67 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

பிரான்சின் சி ஏசி 2.44, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.92 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

மற்ற சந்தைகள் சுமாராக 3.11- 14 % வரை சரிந்து கொண்டே இருக்கின்றன.

ஒரே நாளில் பங்குச் சந்தைகள் 14 % எல்லாம் சரியும் என்பதை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது இந்த கொரோனா பீதி.

மேலே சொன்னவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைத் தாண்டி எங்கோ சென்று கொண்டு இருக்கிறது.

இந்த டாலர் மதிப்பு அதிகரிப்பால், இந்திய ரூபாய் பலவீனமடைந்து, ஆபரணத் தங்கத்தின் விலையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

இன்று இந்திய பங்குச் சந்தைகளின் சரிவை முன்னெடுத்த துறைகள் என்றால் அது நிதித் துறைகள் தான்.

நிஃப்டி வங்கி, நிஃப்டி நிதி சேவைகள், நிஃப்டி பொதுத் துறை வங்கி, நிஃப்டி தனியார் வங்கிகள் எல்லாம் சுமார் 9.9 % – 14.6 % வரை சரிந்து, சந்தை சரிவை ஆழப்படுத்தின.

இன்று காலை இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சந்தை மதிப்பு இருந்ததை விட, வர்த்தகம் நிறைவடையும் போது சுமாராக 10 லட்சம் கோடி ரூபாயாவது காணாமல் போய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இது கடந்த கால சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு நாள் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே