அண்ணா ஓர் அறிவுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது..!! அந்தளவிற்கு அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார்.

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களான கிரேக்கத்தைச் சேர்ந்த டோமஸ்தெனி, இங்கிலாந்தின் எட்மண்ட் பர்க், அமெரிக்காவின் ராபர்ட் கிரின், இங்கர்சால், வில்லியம் ஷேக்ஸ்பிரியர், ஜார்ஜ் பெர்னாட்ஷா , மில்டன், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பி பார்க்க வைத்தார், அவரது அறிவார்ந்த பேச்சால் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டார், முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா.

பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிறேன் என்றார், அண்ணா.

அவர் தன் வசீகர பேச்சால் பகுத்தறிவை பாமரனுக்குள் ஊட்டினார் ; 40ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்.

நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை நாடெங்கும் எதிரொலித்தன. குறிப்பாக சொல்வதென்றால், காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆண்ட நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே தன் வசீகரப் பேச்சால் நாடாளுமன்றத்தையே குலைநடுங்க வைத்தார் அண்ணா.

பெருவாரியாக பேசும் இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று முன்னாள் பிரதமர் நேரு கேட்டபோது,

அப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று அண்ணா பதிலுரைத்தார்.

மெட்ராஸ் மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதால் என்ன நடக்கபோகிறது என்று கேட்டதற்கு, ராஸ்டிரபதியை ஜனாதிபதியாக்கியதால் என்ன விளைந்ததோ? அதுவே, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றுவதற்கும் என்று சொன்னார் அண்ணா.

இந்தியா என்ற ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ்நாடு என்று இன்னொரு நாடா, இது தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கதா என்று நேரு வினவினார். இந்தியா ஒரு நாடு அல்ல ; பல்வேறு மாநிலங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு துணைக் கண்டம் என்றார் அண்ணா.

இந்நிலையில் தனிநாடு, திராவிட நாடு கோரிக்கையை அண்ணா முன்வைத்தார். பின்னர் அவற்றைத் திரும்ப பெற்றுக்கொண்டார்.

ஆயினும் அண்ணாவின் அறிவார்ந்த பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் கூட்டி பிரிவினைவாத தடுப்புசட்டத்தை தனிமனிதனுக்காக கொண்டுவந்தார் நேரு.

வேறு யாருக்கும் இல்லாத இந்த வரலாறு உலகில் அண்ணாவுக்கு மட்டுமே உண்டு.

அண்ணாவின் வசீகர பேச்சு வானளாவிய புகழைக்கொண்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக லண்டனில் நடைபெற்ற கூட்டத்தைச் சொல்லலாம்.

பல்வேறு நாடுகளில் இருந்து அக்கூட்டத்துக்கு பலரும் வந்திருந்தார்கள்.

அப்போது அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், “ஆங்கிலத்தில் “Complete” என்ற சொல்லுக்கும், “Finished” என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்ற கேள்வி எழுந்தது.

அக்கூட்டத்தில் உள்ள பலரும் இரண்டு சொல்லுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை” என்று கூறினார்கள்.

அப்போது அண்ணா கூறினார்,”நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை “Complete”. அதுவே, “நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை “Finished”.

அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்து விட்டால் உங்கள் வாழ்க்கை “completely Finished ” என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் இடைவிடாமல் கைத்தட்டினர். அக்கரவொலியால் அண்ணாவின் புகழ் உலகெங்கும் ஓங்கி ஓலித்தது.

முல்லைக்கு மணமும் தேனுக்கு இனிப்பும் கூட்டத் தேவையில்லை அல்லவா? அதே போலத்தான் நம் தாய்மொழி தமிழுக்குப் பிறமொழி சேர்க்கையும் தேவையற்ற ஒன்று என்றார்.

அண்ணா ‘மேடைப் பேச்சு’ என்ற கட்டுரையில், “மணிமுடி, வாள், ஜெபமாலை இவற்றின் இடத்தை மேடைப் பேச்சு கைப்பற்றி உள்ளது” என்றார்.

ஏனெனில், “அரசனுக்கு மணிமுடியும், வீரனுக்கு வாளும், தவம் செய்வோருக்கு ஜெபமாலையும் எப்படி அவசியமோ அதுபோல மனித இனம் மேம்படவும் விழிப்புணர்வு பெற்றிடவும் மேடைப் பேச்சு அவசியமானது” என்றார் அண்ணா.

காதலைப்பற்றி அவர் கூறும்போது, “Love is above the belt Lust is below the belt” காதல் இதயம் தொடர்பானதென்றும் ; காமம் உடல் தொடர்பானதென்றும் கூறினார்.

அண்ணாவின் பேச்சுக்கு உலகெங்கும் வரவேற்பு கிடைத்தன.

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அவரது வசீகர பேச்சைக் கேட்பதற்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

அண்ணாவின் பேச்சு உலகெங்கும் பயணிக்கத் தொடங்கின.

ஒருமுறை அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணாவிடம், “ஆங்கில புலமைபெற்ற மாணவர் ஒருவர், ‘Because’ என்ற வார்த்தையை ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து முதலிலும் இடையிலும் மும்முறை வருமாறு கூறுக” என்றார்.

அதற்கு அண்ணா, “Because do not come in the middle of a sentence. because, because is an adverb a conjunction” என்றார். எந்த தொடரிலும் இறுதியில் வராச்சொல் ‘ஏனென்றால்’, ‘ஏனென்றால்’, ‘ஏனென்றால்’ என்பது இணைப்புச்சொல் என்று உடனே பதிலளித்தார்.

தாய்மொழி தமிழ்மீது அண்ணாவுக்கு அளவுகடந்த பற்று உண்டு. எல்லாப் புத்தகங்களையும்விடச் சிறந்த புத்தகம் இந்தப் பரந்த உலகம்தான்.

உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு ஏதும் கிடையாது என்பது அவரது ஆணித்தரமான கருத்தாகும்.

“நூலானது ஒட்டுமொத்த உலகத்தையும் கைக்குள் அடக்கிவிடும். ஆகவே, வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்றும் ; அதுவே அதுவே அறிவார்ந்த தலைமுறைகளை இந்த நாட்டுக்கு விட்டுச்செல்லும் என்றார்” அண்ணா.

அண்ணா ஓர் அறிவின் உச்சம் என்பதை வெளிநாடுகளில் அவர் ஆற்றிய பேருரையே மெய்ப்பித்தது. தமிழகத்தின் அறிவுக் களஞ்சியமான அண்ணா ; அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞரானார்.

காலத்தின் கொடுமை அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நேரிட்டது.

மருத்துவமனையில் தனக்கான அறுவை சிகிச்சையின்போது, உயிர் பிழைப்போமா…உயிர் துறப்போமா என்ற உறுதிதன்மை தெரியாத நிலையில், மருத்துவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் அவர், “எனக்கான அறுவைசிகிச்சையை ஒருநாள் தள்ளிவைக்கமுடியுமா ” என்பதுதான்.

மருத்துவர்கள் ஏன் என கேட்டதற்கு, அண்ணா உரைத்த பதில், ” நூல் ஒன்றை படிக்க தொடங்கி விட்டேன். அவற்றை முழுமையாக படித்து முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல்தான்” என்றார்.

பம்பாய் (மும்பை)செல்வதற்காக தயாரானார் அண்ணா. அப்போது விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

ஏன் தெரியுமா?

“10புத்தகங்கள் படிக்கவேண்டியிருக்கு. அதற்கு மூன்று நாட்கள் ஆகும். காரில் பயணம் செய்தால்தான் அவற்றையெல்லாம் முழுமையாகப் படிக்க முடியும். ஒன்றரை மணிநேர விமானப் பயணத்தில் அவற்றையெல்லாம் படிக்க இயலாது” என்றார். சும்மாவா சொன்னார்கள்… அண்ணா ஒரு புத்தகப் புழு ; பேரறிஞர் என்று.

image

1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி அண்ணா மறைந்தார்.

வேறெந்த அரசியல் தலைவரின் மறைவுக்கும் இல்லாத வகையில் அவரது இறுதி சடங்குக்கு மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக திரண்டது.

இன்றுவரை அந்த கின்னஸ் ரிகார்டை வேறு யாரும் முறியடிக்க வில்லை. இன்று அண்ணா நினைவு நாள்.

அவர் விட்டுசென்ற அறிவார்ந்த கருத்துகள் இன்று உயிர்ப்புடன் இருக்கின்றன. அது தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை அவற்றை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே