திருமழிசை காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் மீண்டும் ஆர்பாட்டம்

திருமழிசையில் செயல்பட்டு வரும் காய்கறி மொத்த சந்தையை பழையபடி கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள், லாரி டிரைவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் கொரோனா பரவல் மையமாக கோயம்பேடு மார்க்கெட் மாறியதைத் தொடர்ந்து அது தற்காலிகமாக மூடப்பட்டது.

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள நிலையில், தங்களை மீண்டும் கோயம்பேடு சந்தையிலிருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிப்படியாக வியாபாரிகள் கோயம்பேடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமழிசையில் தற்போது 200 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 50, 50 வாகனங்களாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

இதனால், மாலை 6 மணிக்கு வந்தால், பொருட்களை வாங்கிவிட்டு செல்லவே அடுத்த நாள் காலை ஆகிவிடுகிறது என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாக திருமழிசை சந்தை மூடப்பட்டது. திங்கட்கிழமை காலை சந்தை திறக்கப்படும் என்பதால் காய்கறி வாங்க பலரும் மாலை நேரத்தில் இருந்து குவிய ஆரம்பித்தனர்.

இவர்களை ஒழுங்குபடுத்தி சந்தைக்குள் அனுப்ப முடியாமல் போலீசார் திணறினர்.

இதனால் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் எரிச்சலடைந்த வியாபாரிகள் மற்றும் லாரி, மினி வேன் ஓட்டுநர்கள், சந்தையை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே