தமிழ் திரையுலகில் 20 வருடங்களுக்கும் மேலாக காமெடி நாயகனாக கோலோச்சி வருபவர் வடிவேலு.

2000ஸ் காலங்களில் கோலிவுட்டிற்குள் நுழைந்த இவர், தனது உடல் மொழியாலும், வசனங்களினாலும் மக்களை ஈர்த்தவர். இவரது வசனங்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லை, இவரைப் பிடிக்காத குழந்தைகளும் இல்லை. ஆதித்யா, சிரிப்பொலி போன்ற நகைச்சுவை சேனல்களில் இவரது நகைச்சுவை காட்சிகள் ஒலிபரப்பான காலம் என்றோ மலையேறிவிட்டது. இன்று ஆன்ட்ராய்டு முதல், ஐஃபோன் வரை எங்கு திரும்பினாலும், சமூக வலைதளம் எல்லாம் இவர் முகம் தான். கிடைப்பதையெல்லாம் கன்டென்டாக மாற்றி, அனைவரையும் சிரிக்க வைத்து, மீம் க்ரியேட்டராக உலா வரும் அனைவருக்கும் முகமே இவர்தான். வடிவேலுவின் முகம் இல்லையென்றால், மீம்ஸ்களே இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு டெம்ப்ளேட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்துள்ளார்.

பிரபலமான டைலாக்குகள்:

நடிகர் வடிவேலுவின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுவது, அவரது உடல் மொழியும் அவர் பேசும் வசனங்களின் தொனியும்தான். ‘சிங் இன் தி ரெய்ன்..’ என மனதை திருடிவிட்டாய் படத்தில் இவர் பாடிய பாடலை, வாழ்வில் கஷ்டங்கள் வரும் நேரங்களில் அனைவரும் பாடுவதுண்டு. அதே போல, ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இவர் பேசிய, ‘ஆணியே புடுங்க வேணாம்..’ என்ற டைலாக்கை தேவையில்லாத வேலை செய்து துன்புறுத்துவோரிடம் பயன்படுத்துகிறோம். சமீபத்தில் கூட, #JusticeforNesamani என்ற ஹேஷ்டாக இணையம் முழுவதும் வைரலாகி, நேசமணி கதாப்பாத்திரத்தை மீண்டும் அனைவரின் கன்முன்னும் வந்து நிறுத்தியது.

‘வின்னர்’படத்தில் பஞ்ச் பேசிய கைப்புள்ள:

வடிவேலு இடம் பெரும் படங்களில் கதாநாயகனின் ஆரம்ப காட்சிக்கு கைத்தட்டல் எழுகிறதோ இல்லையோ, இவரது இன்ட்ரோ சீனிற்கு கண்டிப்பாக சிரிப்பலைகளும் கைத்தட்டல்களும் எழுந்து விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ‘வின்னர்’. படம் முழுவதும் இவர் பேசும் வசனங்களை ரசிக்காதவர்களே இல்லை. முதலில் கெத்து காட்டி பெரிய டான் போல படத்தில் தோன்றினாலும், வில்லன்களிடம் அடிவாங்கும் காட்சியில் ‘வேணாம்..வலிக்குது..அழுதுருவேன்’ என பேசி ரசிகர்களை சிரிப்பு கடலில் ஆழ்த்தினார்.

கதாநாயகனாக உருவெடுத்த வடிவேலு:

தொடரந்து காமெடி ரோலில் நடித்து வந்த வடிவேலு, இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், இரண்டு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. இதில், காட்சிக்கு காட்சி இவர் தனக்கே உரிய மாட்யூலேஷனில் இவர் பேசிய வசனங்களினால், திரையரங்குகளில் சிரிப்பலைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ‘அல்லக்கை முண்டமே..’ என செந்தமிழில் திட்டிய வசனம் பெரிய அளவில் ஹிட் ஆனது. ‘பாணப் பத்திர ஓனான்டி..வந்து தொலையச்சொல்லும்..’ என்று இவர் தெனாவட்டாக பேசிய காட்சியில் கூட ரசிகர்கள் அதனை ரசிக்கவே செய்தனர். நகைச்சுவை-புராண கால கதையம்சம் என கலவையாக ரசிகர்கள் முன் வைக்கப்பட்ட இப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் வடிவேலு என்றால், அது மிகையாகாது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே