திருவள்ளூர் : தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம்..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தம்மை காத்துக்கொள்ள மக்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை தடுப்பூசி செலுத்துக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச பெட்ரோல், பரிசுத் தொகை, குலுக்கல் முறையில் பரிசுகள் என பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற போது, தடுப்பூசி செலுத்துபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக் காசு, வெள்ளிப் பொருட்கள், புடவை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாளை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆன்ட்ராய்ட் செல்போன் இலவசமாக வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆண்ட்ராய்ட் மொபைல் 3 பேருக்கு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பான 10 மீம்ஸ்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் மீம்ஸ் போடுபவர்கள் மாவட்ட ஆட்சியரை டேக் செய்து பதிவிட வேண்டும் என்றும் 25ஆம் தேதிக்குள் இதனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே